PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoபின்வருநிலை அணிகள்
ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ பொருளோ மீண்டும் பல இடங்களிலும் வருதலே ’பின்வருநிலை’ அணியாகும்.
இது மூன்று வகைப்படும்.
சொல் பின்வருநிலையணி
முன் வந்த சொல்லே பின்னும் பல விடத்தும் வந்து வேறு பொருள் உணர்த்துவது சொல்பின்வருநிலை அணியாகும்.
சான்று
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
இக்குறளில் ’துப்பு’ என்ற சொல் மீண்டும் மீண்டும் வந்து வேறு வேறு பொருள்களைத் தருகிறது.
துப்பார்க்கு – உண்பவர்க்கு; துப்பு – நல்ல, நன்மை; துப்பு – உணவு என்று பல பொருள்களில் வருவதைக் காணலாம்.
பொருள் பின்வருநிலையணி
செய்யுளில் முன்வந்த ஒரு சொல்லின் பொருளே பின்னரும் பல இடங்களில் வருவது பொருள்பின் வருநிலையணி ஆகும்.
சான்று
அவிழ்ந்தன தோன்றி யலர்ந்தன காயா
நெகிழ்ந்தன நேர்முகை முல்லை - மகிழ்ந்திதழ்
விண்டன கொன்றை விரிந்த கருவிளை
கொண்டன காந்தள் குலை.
இச்செய்யுளில் அவிழ்ந்தன, அலர்ந்தன, நெகிழ்ந்தன, விண்டன, விரிந்தன, கொண்டன ஆகிய சொற்கள் மலர்ந்தன என்ற ஒரு பொருளையே தந்தன.
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை.
இக்குறட்பாவில் செல்வம், மாடு ஆகிய இரு சொற்களுமே செல்வத்தையே குறிக்கின்றன.
சொற்பொருள் பின்வருநிலையணி
முன்னர் வந்த சொல்லும் பொருளும் பின்னர்ப் பல இடங்களிலும் வருவது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்.
சான்று
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
இக்குறட்பாவில் ’விளக்கு’ என்னும் சொல் ஒரே பொருளில் பலமுறை வந்துள்ளதால் இது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்.