PDF chapter test TRY NOW

நுழையும் முன்
 
உலகில் வாழும் மக்கள் அனைவருக்கும் சிறப்பான அறங்களை வலியுறுத்தியவர் திருவள்ளுவர். வீட்டிற்கு வந்த விருந்தினரைப் போற்றுதல், இனிய சொற்களைப் பேசுதல், பிறர் பொருளை விரும்பாமை, ஊக்கத்துடன் செயல்படுதல், பயனற்ற சொற்களைப் பேசாமல் இருத்தல் ஆகிய அறங்களைப் பற்றிய திருவள்ளுவரின் கருத்துகளை அறிவோம் வாருங்கள்.
 
விருந்தோம்பல்
 
1. விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று.
அமிழ்தமே ஆனாலும் விருந்தினர் இருக்கும்போது தான் மட்டும் உண்பது விரும்பத்தக்கது அன்று.
 
2. மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.
மோந்து பார்த்தால் அனிச்ச மலர் வாடிவிடும். நம் முகம் மாறினாலே விருந்தினர் உள்ளம் வாடிவிடும்.
 
கள்ளாமை
 
3. உள்ளத்தால் உள்ளலும் தீதேபிறன் பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.
அடுத்தவர் பொருளைக் களவாடலாம் என உள்ளத்தால் நினைப்பது கூடத் தீமையானது.
 
4. களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.
களவு மூலம் சேர்க்கப்படும் செல்வம் வளர்வது போலத் தோன்றினாலும் முடிவில் அழிந்துவிடும்.
 
ஊக்கமுடைமை
 
5. உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.
ஊக்கமே நிலையான செல்வம். மற்றவை எல்லாம் நிலைத்து நில்லாமல் அழிந்து விடும்.
 
6. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவுஇலா
ஊக்கம் உடையான் உழை.
தளராத ஊக்கம் உடையவனிடம் ஆக்கமானது தானே வழிகேட்டுக் கொண்டு செல்லும்.
  
7. வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு.
தண்ணீரின் உயரத்துக்கு ஏற்ப நீர்ப் பூக்கள் வளரும். ஊக்கத்தின் அளவுக்கு ஏற்ப மனிதர்கள் உயர்வார்கள்.
  
8. உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.
எண்ணுவதை உயர்வாகவே எண்ணுக. எண்ணியதை அடையா விட்டாலும் எண்ணத்தைக் கைவிடக் கூடாது.
 
பயனில சொல்லாமை
 
9. அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.
நன்மை எது என ஆராயும் அறிவு உடையவர்கள் பயன்தராத சொற்களைப் பேசமாட்டார்கள்.
 
10. சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயன்இலாச் சொல்.
பயனுடைய சொற்களை மட்டுமே பேசுக. பயன் இல்லாத சொற்களைப் பேசாமல் விட்டு விடுக.