PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஆகுபெயர் ஒன்றன் பெயர் தனக்குரிய பொருளை உணர்த்தாமல் அதனோடு தொடர்புடைய வேறு ஒரு பொருளுக்குத் தொன்று தொட்டு ஆகி வருவது ஆகுபெயர் எனப்படும்.
(எ.கா)
உலகம் சிரித்தது.
என் பள்ளி வென்றது.
இவற்றில் உலகம், பள்ளி என்னும் இடப்பெயர்கள் இடத்தை உணர்த்தாமல் முறையே உலகில் உள்ள மக்களையும் பள்ளியில் உள்ள மாணவர்களையும் உணர்த்துகின்றன.
பொருள் முதல் ஆறு ஆகுபெயர்கள் பொருள்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், பண்புப் பெயர், தொழில்பெயர் என்னும் அறுவகைப் பெயர்களை அடிப்படையாகக் கொண்டு வரும் ஆகுபெயர்களைப் பொருள் முதல் ஆறு ஆகுபெயர்கள் என்பர்.
பொருளாகு பெயர்
முதற்பொருளின் பெயர் அதன் சினைப் பொருளுக்கு ஆகி வருவது பொருளாகு பெயர் எனப்படும்.
இது முதலாகு பெயர் என்றும் வழங்கப்பெறும்.
(எ.கா) முல்லை மணம் வீசியது.
இதில் முல்லை என்பது முல்லைக் கொடியின் பெயர். இங்கே மணம் வீசியது என்னும் குறிப்பால் இது சினைப் பொருளாகிய முல்லைப் பூவுக்கு ஆகி வந்துள்ளது.
இடவாகு பெயர்
ஓர் இடத்தின் பெயர் அந்த இடத்தில் உள்ள பொருளுக்கு ஆகி வருவது இடவாகு பெயர் எனப்படும்.
(எ.கா) ஊர் சிரித்தது.
இதில் ஊர் என்னும் இடப்பெயர் சிரித்தது என்னும் குறிப்பால் ஊரில் உள்ள மக்களுக்கு ஆகி வந்துள்ளது.
காலவாகு பெயர்
ஒரு காலத்தின் பெயர் அந்தக் காலத்தோடு தொடர்புடைய பொருளுக்கு ஆகி வருவது காலவாகு பெயர் எனப்படும்.
(எ.கா) கார் அறுவடை ஆயிற்று.
இதில் கார் என்பது காலப்பெயர்.
இங்கே அறுவடை ஆயிற்று என்னும் குறிப்பால் இது கார்காலத்தில் விளையும் பயிருக்கு ஆகி வந்துள்ளது.
சினையாகு பெயர்
ஒரு சினைப் பொருளின் பெயர் அதன் முதற்பொருளுக்கு ஆகி வருவது சினையாகு பெயர் எனப்படும்.
(எ.கா) தலைக்குப் பத்து ரூபாய் கொடு.
இதில் தலை என்னும் சினைப் பொருளின் பெயர், பத்து ரூபாய் கொடு என்னும் குறிப்பால் அந்தத் தலையை உடைய மனிதனுக்கு ஆகி வந்துள்ளது. முதலாகு பெயர் சினையாகு பெயர் முதற்பெயர் சினைப் பொருளுக்கு ஆகி வரும்.
சினைப்பெயர் முதற்பொருளுக்கு ஆகி வரும்.
பண்பாகு பெயர்
ஒரு பண்பின் பெயர் அப்பண்புடைய பொருளுக்கு ஆகி வருவது பண்பாகு பெயர் எனப்படும்.
இது குணவாகு பெயர் என்றும் வழங்கப்பெறும்.
(எ.கா) இனிப்பு உண்டான்.
இதில் இனிப்பு என்னும் சுவைப் பண்பின் பெயர் அச்சுவை கொண்ட பொருளுக்கு ஆகி வந்துள்ளது.
தொழிலாகு பெயர்
ஒரு தொழிலின் பெயர் அத்தொழிலால் அமைந்த பொருளுக்கு ஆகி வருவது தொழிலாகு பெயர் எனப்படும்.
(எ.கா) சுண்டல் உண்டான்.
இதில் சுண்டல் என்னும் தொழிற்பெயர் அத்தொழிலால் அமைந்த பொருளுக்கு ஆகி வந்துள்ளது.
அளவை ஆகு பெயர்கள் எண்ணல் எடுத்தல், முகத்தல், நீட்டல் முதலிய அளவைப் பெயர்கள் ஆகுபெயர்களாக வரும்.
எண்ணல் அளவையாகு பெயர்
ஓர் எண்ணல் அளவையின் பெயர் அந்த எண்ணிக்கையில் உள்ள பொருளுக்கு ஆகி வருவது எண்ணல் அளவையாகு பெயர் எனப்படும்.
(எ.கா) ஒன்று பெற்றால் ஒளி மயம்.
இதில் ஒன்று என்னும் எண்ணல் அளவைப் பெயர் அந்த எண்ணுள்ள பொருளுக்கு (குழந்தைக்கு) ஆகி வந்திருப்பதால் எண்ணல் அளவையாகு பெயர் எனப்பட்டது.