PDF chapter test TRY NOW
க், ங் - ஆகிய இரு மெய்களும் நாவின் முதற் பகுதி, அண்ணத்தின் அடிப் பகுதியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.
ச், ஞ் - ஆகிய இரு மெய்களும் நாவின் இடைப்பட்டப் பகுதி, நடு அண்ணத்தின் இடைப் பகுதியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.
ட், ண் - ஆகிய இரு மெய்களும் நாவின் நுனி, அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.
கஙவும் சஞவும் டணவும் முதல் இடை
நுனிநா அண்ணம் உரவுமுறை வருமே. நன்னூல் நூற்பா - 79.
த், ந் - ஆகிய இரு மெய்களும் மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் நுனி பொருந்துவதால் பிறக்கின்றன.
அண்பல் அடிநா முடியுறத் த ந வரும். நன்னூல் நூற்பா - 80.
ப், ம் - ஆகிய இரு மெய்களும் மேல் இதழும் கீழ் இதழும் பொருந்துவதால் பிறக்கின்றன.
மீகீழ் இதழ்உறப் பம்மப் பிறக்கும். நன்னூல் நூற்பா - 81.
ய் – இது நாக்கின் அடிப்பகுதி, மேல் வாயின் அடிப் பகுதியைப் பொருந்துவதால் பிறக்கிறது.
அடிநா அடிஅணம் உற யத் தோன்றும். நன்னூல் நூற்பா - 82.
ர், ழ் - ஆகிய இரு மெய்களும் மேல் வாயை நாக்கின் நுனி வருடுவதால் பிறக்கின்றன.
அண்ண நுனிநா வருட ரழ வரும். நன்னூல் நூற்பா - 83.
ல் – இது மேல் வாய்ப் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால் பிறக்கிறது.
ள் – இது மேல் வாயை நாக்கின் ஓரங்கள் தடித்துத் தடவுதலால் பிறக்கிறது.
அண்பல் முதலும் அண்ணமும் முறையின்
நாவிளிம்பு வீங்கி ஒற்றவும் வருடவும்
லகார ளகாரமாய் இரண்டும் பிறக்கு. நன்னூல் நூற்பா - 84.
வ் – இது மேல் வாய்ப் பல்லைக் கீழ் உதடு பொருந்துவதால் பிறக்கிறது.
மேற்பல் இதழ் உற மேவிடும் வவ்வே. நன்னூல் நூற்பா - 85.
ற், ன் - ஆகிய இரு மெய்களும் மேல் வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதால் பிறக்கின்றன.
அண்ணம் நுனுநா நனியுறில் றன வரும். நன்னூல் நூற்பா - 86.
சார்பெழுத்துகள் :
ஆய்த எழுத்து வாயைத் திறந்து ஒலிக்கும் முயற்சியால் பிறக்கிறது.
பிற சார்பெழுத்துகள் யாவும் தத்தம் முதலெழுத்துகள் தோன்றும் இடங்களிலேயே, அவை பிறப்பதற்கு உரிய முயற்சிகளைக் கொண்டு தாமும் பிறக்கின்றன.
ஆய்தக்கு இடம்தலை அங்கா முயற்சி
சார்பெழுத்து ஏனவும் தம்முதல் அனைய. நன்னூல் நூற்பா - 87.
Reference:
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்.
தமிழ்ப் பாடப் புத்தகம் - வகுப்பு எட்டு - திருந்திய பதிப்பு 2021.
தமிழ்ப் பாடப் புத்தகம் - வகுப்பு ஆறு - திருந்திய பதிப்பு 2021.
நன்னூல் எழுத்ததிகாரம் - மணிவாசகர் பதிப்பகம் சென்னை. பதிப்பு - சூலை, 2001.