PDF chapter test TRY NOW
வல்லினம் மிகும் இடங்கள்
அந்த, இந்த என்னும் சுட்டுத்திரிபுகளை அடுத்து வல்லினம் மிகும்.
(எ.கா.) அந்தப் பக்கம். இந்தக் கவிதை.
எந்த என்னும் வினாத்திரிபை அடுத்து வல்லினம் மிகும்.
(எ.கா.) எந்தத் திசை? எந்தச் சட்டை
இரண்டாம் வேற்றுமை உருபாகிய ஐ வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும்.
(எ.கா.) தலையைக் காட்டு. பாடத்தைப்படி.
நான்காம் வேற்றுமை உருபாகிய கு வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும்.
(எ.கா.) எனக்குத் தெரியும். அவனுக்குப் பிடிக்கும்.
இகரத்தில் முடியும் வினையெச்சங்களை அடுத்து வல்லினம் மிகும்.
(எ.கா.) எழுதிப் பார்த்தாள். ஓடிக் களைத்தான்.
உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் வன்தொடர்க் குற்றியலுகரமாக இருந்தால் மட்டும் வல்லினம் மிகும்.
(எ.கா.) பெற்றுக் கொண்டேன். படித்துப் பார்த்தார்.
எதிர்மறைப் பெயரெச்சத்தின் இறுதி எழுத்து கெட்டு வருவது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஆகும். இதில் வல்லினம் மிகும்.
(எ.கா.) செல்லாக் காசு, எழுதாப்பாடல்.
உவமைத்தொகையில் வல்லினம் மிகும்.
(எ.கா.) மலர்ப்பாதம், தாய்த்தமிழ்.
உருவகத்தில் வல்லினம் மிகும்.
(எ.கா.) தமிழ்த்தாய், வாய்ப்பவளம்.
எண்ணுப்பெயர்களில் எட்டு, பத்து ஆகிய இரண்டு பெயர்களில் மட்டும் வல்லினம் மிகும்.
(எ.கா.) எட்டுப்புத்தகம், பத்துக்காசு.
அப்படி, இப்படி, எப்படி ஆகிய சொற்களை அடுத்து வல்லினம் மிகும்.
(எ.கா.) அப்படிச்செய், இப்படிக்காட்டு, எப்படித்தெரியும்?
திசைப்பெயர்களை அடுத்து வல்லினம் மிகும்.
(எ.கா.) கிழக்குக்கடல், மேற்குச்சுவர், வடக்குத்தெரு, தெற்குப்பக்கம்.
மகர மெய்யில் முடியும் சொல்லை அடுத்து வல்லினம் வந்தால், அந்த மகர மெய் அழிந்து அவ்விடத்தில் வல்லினம் மிகும்.
(எ.கா.) மரம் + சட்டம் = மரச்சட்டம், வட்டம் + பாறை = வட்டப்பாறை.