PDF chapter test TRY NOW

மக்களுக்கு அழகு சேர்ப்பன அணிகலன்கள்.
 
அது போன்று செய்யுள்களுக்கு அழகு செய்து சுவையை உண்டாக்குவன அணிகள்.
 
தற்குறிப்பேற்ற அணி
 
இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.
  
சான்று
  
‘போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
‘வாரல்’ என்பனபோல் மறித்துக்கை காட்ட’
  
பாடலின் பொருள்
 
கோட்டை மதில் மேல் இருந்த கொடியானது வரவேண்டாம் எனத் தடுப்பதுபோல, கை காட்டியது என்பது பொருள்.
 
அணிப்பொருத்தம்
 
கோவலனும், கண்ணகியும் மதுரை மாநகருக்குள் சென்றபோது மதிலின் மேலிருந்த கொடிகள் காற்றில் இயற்கையாக அசைந்தன.
 
ஆனால் இளங்கோவடிகள், கோவலன் மதுரையில் கொலை செய்யப்படுவான் எனக்கருதி அக்கொடிகள் கையை அசைத்து, ‘இம்மதுரைக்குள் வரவேண்டா’ என்று தெரிவிப்பது போலக் காற்றில் அசைவதாகத் தம் குறிப்பைக் கொடியின் மீது ஏற்றிக் கூறுகிறார்.
 
இவ்வாறு இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.
தீவக அணி
 
தீவகம் என்னும் சொல்லுக்கு 'விளக்கு' என்று பொருள்.
 
ஓர் அறையில், ஓர் இடத்தில் வைக்கப்பட்ட விளக்கானது அவ்வறையில் பல இடங்களிலும் உள்ள பொருள்களுக்கு வெளிச்சம் தந்து விளக்குதல் போல,
 
செய்யுளின் ஓரிடத்தில்நின்ற ஒரு சொல் அச்செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்திப் பொருளை விளக்குவதால் இவ்வணி தீவக அணி எனப்பட்டது.
 
முதல்நிலைத் தீவகம், இடைநிலைத் தீவகம், கடைநிலைத் தீவகம் என்னும் மூன்று வகையாக வரும்.
 
சான்று
  
சேந்தன வேந்தன் திருநெடுங்கண், தெவ்வேந்தர்
ஏந்து தடந்தோள், இழிகுருதி - பாய்ந்து
திசைஅனைத்தும், வீரச் சிலைபொழிந்த அம்பும்,
மிசைஅனைத்தும் புள்குலமும் வீழ்ந்து.
 
(சேந்தன-சிவந்தன; தெவ்-பகைமை; சிலை-வில்; மிசை-மேலே; புள்-பறவை;)
 
பாடலின் பொருள்
 
அரச னுடைய கண்கள் கோபத்தால் சிவந்தன; அவை சிவந்த அளவில் பகை மன்னர்களுடைய பெரிய தோள்கள் சிவந்தன; குருதி பாய்ந்து திசைகள் அனைத்தும் சிவந்தன; வலிய வில்லால் எய்யப்பட்ட அம்புகளும் சிவந்தன; குருதி மேலே வீழ்தலால் பறவைக் கூட்டங்கள் யாவும் சிவந்தன.
 
அணிப் பொருத்தம்
 
வேந்தன் கண் சேந்தன
தெவ்வேந்தர் தோள் சேந்தன
குருதி பாய்ந்து திசை அனைத்தும் சேந்தன
அம்பும் சேந்தன
புள் குலம் வீழ்ந்து
மிசைஅனைத்தும் சேந்தன.
 
இவ்வாறாக முதலில் நிற்கும் 'சேந்தன' (சிவந்தன) என்ற சொல் பாடலில் வருகின்ற கண்கள், தோள்கள், திசைகள், அம்புகள், பறவைகள் ஆகிய அனைத்தோடும் பொருந்திப் பொருள் தருகிறது.
 
அதனால் இது தீவக அணி ஆயிற்று.