PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoவேற்றுமை அணி
தேனும் வெள்ளைச்சர்க்கரையும் இனிப்புச்சுவை உடையவை.
அவற்றுள், தேன் உடலுக்கு நன்மை செய்யும்;
வெள்ளைச் சர்க்கரை உடலுக்குத் தீங்கு செய்யும்.
இப்பகுதியைக் கவனியுங்கள். வெள்ளைச்சர்க்கரைக்கும் தேனுக்கும் இடையே ஒற்றுமையும் உண்டு; வேற்றுமையும் உண்டு.
இரண்டும் இனிப்புச்சுவை உடையவை என்பது ஒற்றுமை.
ஒன்று உடலுக்கு நன்மை செய்யும்; இன்னொன்று தீங்கு செய்யும் என்பது வேற்றுமை.
இவ்வாறு இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக் கூறி, பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமையணி எனப்படும்.
சான்று
தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.
இத்திருக்குறளில் முதலில் நெருப்பு, கொடுஞ்சொல் ஆகிய இரண்டும் சுடும்தன்மை உடையவை என்று கூறப்படுகிறது.
பின்னர், நெருப்பினால் சுட்ட காயம் ஆறிவிடும்; உள்ளத்தில் ஏற்பட்ட வடு ஆறாது என்று இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு கூறப்படுகிறது.
எனவே இது வேற்றுமை அணி ஆகும்.
இரட்டுறமொழிதல் அணி
காலில் காயத்திற்குக் கட்டுப்போட்டிருந்த இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான்.
”எந்த ஊருக்குப் பயணச்சீட்டு வேண்டும்?” என்று நடத்துநர் கேட்டார்.
அதேநேரம் அருகிலிருந்தவர், ”உன் காலில் எதனால் காயம் ஏற்பட்டது?” என்று கேட்டார்.
அவன், “செங்கல்பட்டு” என்று கூறினான்.
அவன் கூறியது இருவரின் வினாக்களுக்கும் பொருத்தமான விடையாக அமைந்தது.
அவன் செல்ல வேண்டிய ஊர் செங்கல்பட்டு என்று நடத்துநர் புரிந்துகொண்டார்.
அவன் காலில் செங்கல்பட்டதால் காயம் ஏற்பட்டது என மற்றவர் புரிந்துகொண்டார்.
இவ்வாறு ஒரு சொல் அல்லது தொடர் இருபொருள் தருமாறு அமைவது இரட்டுறமொழிதல் என்னும் அணியாகும்.
இதனைச் சிலேடை என்றும் கூறுவர்.
சான்று
ஓடும் இருக்கும் அதனுள்வாய் வெளுத்திருக்கும்
நாடுங் குலைதனக்கு நாணாது - சேடியே
தீங்காயது இல்லா திருமலைரா யன்வரையில்
தேங்காயும் நாயும்நேர் செப்பு.
இப்பாடலின் பொருள் தேங்காய், நாய் ஆகிய இரண்டுக்கும் பொருந்துவதாக அமைந்துள்ளது.
தேங்காயில் ஓடு இருக்கும்;
தேங்காயின் உட்பகுதி வெண்மை நிறத்தில் இருக்கும்;
தேங்காய் கோணல் இல்லாமல் குலையாகத் தொங்கும்.
நாய் சிலசமயம் ஓடிக்கொண்டிருக்கும்;
சிலசமயம் ஓரிடத்தில் படுத்து இருக்கும்;
அதன் வாயின் உட்பகுதி வெண்மையாக இருக்கும்;
குரைப்பதற்கு வெட்கப்படாது.
இவ்வாறு இப்பாடல் இரண்டு பொருள் தரும்படி பாடப்பட்டுள்ளதால்,
இஃது இரட்டுறமொழிதல் அணி ஆகும்.