PDF chapter test TRY NOW

 i) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகும்
 
பெயரெச்சத்தில் ஒரு வகை ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஆகும்.
 
அறியாத என்பது எதிர்மறைப் பெயரெச்சம்.
 
இதன் முன் வரும் வல்லினம் மிகாது.
 
சான்று : அறியாத பிள்ளை.
 
ஆனால் அறியாத என்பதில் உள்ள ‘த’ என்னும் ஈறு கெட்டு (மறைந்து), அறியா என நிலைமொழியில் நிற்கும்.
 
இது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஆகும். இதன் முன் வருமொழி முதலில் வரும் வல்லினம் கட்டாயம் மிகும்.
 
சான்று :
 
அறியா + பிள்ளை = அறியாப்பிள்ளை.
 
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன்வரும் வல்லினம் மிகுதலுக்கு மேலும் பல சான்றுகள் காட்டலாம்.
 
அவை வருமாறு :
 
செல்லா + காசு = செல்லாக் காசு
 
(செல்லாத காசு)
 
ஓடா + குதிரை = ஓடாக் குதிரை
 
(ஓடாத குதிரை)
 
தீரா + சிக்கல் = தீராச் சிக்கல்
 
(தீராத சிக்கல்)
 
காணா + பொருள் = காணாப் பொருள்
 
(காணாத பொருள்)
 
ii) அகர ஈற்று, இகர ஈற்று, யகர மெய் ஈற்று வினையெச்சங்களின் முன்னும், வன்தொடர்க் குற்றியலுகர ஈற்று வினையெச்சங்களின் முன்னும், ஆக, ஆய் என முடியும் வினையெச்சங்களின் முன்னும் வரும் வல்லினம் மிகும்.
 
அகர ஈற்று வினையெச்சங்களின் முன் வரும் வல்லினம் மிகல்
  
சான்று :
 
வர + சொன்னான் = வரச் சொன்னான்
உண்ண + போனான் = உண்ணப் போனான்
உட்கார + பார்த்தான் = உட்காரப் பார்த்தான்
 
இகர ஈற்று வினையெச்சங்களின் முன்வரும் வல்லினம் மிகல்
  
சான்று :
 
ஓடி + போனான் = ஓடிப் போனான்
தேடி + பார்த்தான் = தேடிப் பார்த்தான்
கூறி + சென்றான் = கூறிச் சென்றான்
கூடி + பேசினர் = கூடிப் பேசினர்
 
யகர மெய் ஈற்று வினையெச்சங்களின் முன்வரும் வல்லினம் மிகல்
  
சான்று :
 
போய் + பார்த்தான் = போய்ப் பார்த்தான்
 
வன்தொடர்க் குற்றியலுகர ஈற்று வினையெச்சங்களின் முன் வரும் வல்லினம் மிகல்  
  
சான்று :
 
கற்று + கொடுத்தான் = கற்றுக் கொடுத்தான்
வாய்விட்டு + சிரித்தான் = வாய்விட்டுச் சிரித்தான்
படித்து + கொடுத்தான் = படித்துக் கொடுத்தான்
எடுத்து + தந்தான் = எடுத்துத் தந்தான்
கடித்து + குதறியது = கடித்துக் குதறியது
வைத்து + போனான் = வைத்துப் போனான்
 
ஆக, ஆய், என என்று முடியும் வினையெச்சங்களின் முன் வல்லினம் மிகல்
  
சான்று :
 
தருவதாக + சொன்னான் = தருவதாகச் சொன்னான்
வருவதாய் + கூறினார் = வருவதாய்க் கூறினார்
வா என + கூறினார் = வா எனக் கூறினார்
 
மேலே காட்டிய சான்றுகள் எல்லாம் தெரிநிலை வினையெச்சங்கள் ஆகும்.
 
வினையெச்சத்தில் குறிப்பு வினையெச்சம் என்ற ஒன்றும் உண்டு.
 
ஒரு தொழிலை உணர்த்தும் வினைப்பகுதியிலிருந்து தோன்றுவது தெரிநிலை வினையெச்சம்.
 
சான்று: உண்ணப் போனான். உண் என்ற வினைப்பகுதியிலிருந்து தோன்றியதால் உண்ண என்பது தெரிநிலை வினையெச்சம்.
 
ஒரு பண்பை உணர்த்தும் பெயர்ப்பகுதியிலிருந்து தோன்றுவது குறிப்பு வினையெச்சம்.
  
சான்று :
 
மெல்லப் பேசினாள்.
 
மென்மை என்ற குணத்தை உணர்த்தும் பெயர்ப்பகுதியிலிருந்து தோன்றியதால் மெல்ல என்பது குறிப்பு வினையெச்சம்.
 
மொழியியலார் இதனை வினையடை (Adverb) என்று குறிப்பிடுவர்.
 
மேலே பார்த்த தெரிநிலை வினையெச்சம் போலவே
 
குறிப்புவினையெச்சத்தின் முன்வரும் வல்லினம் மிகும்.
  
சான்று :
 
நிறைய + பேசுவான் = நிறையப் பேசுவான்
இனிக்க + பேசுவான் = இனிக்கப் பேசுவான்
நன்றாக + சொன்னான் = நன்றாகச் சொன்னான்
வேகமாக + கூறினான் = வேகமாகக் கூறினான்
விரைவாய் + பேசினார் = விரைவாய்ப் பேசினார்
மெல்லென + சிரித்தாள் = மெல்லெனச் சிரித்தாள்
 
மகர இறுதி கெட்டு உயிர் ஈறாய் நிற்கும் சொற்கள் முன்வரும் வல்லினம் மிகல்
 
புணர்ச்சியில் மகர இறுதி கெட்டு, உயிர் ஈறாய் நிற்கும் சொற்கள் முன்வரும் வல்லினம் மிகும்.
  
சான்று:
 
மரம் + கிளை > மர + க் + கிளை = மரக்கிளை
 
குளம் + கரை > குள + க் + கரை = குளக்கரை
 
ஆரம்பம் + பள்ளி > ஆரம்ப + ப் + பள்ளி = ஆரம்பப் பள்ளி
 
தொடக்கம் + கல்வி > தொடக்க + க் + கல்வி = தொடக்கக் கல்வி
 
அறம் + பணி > அற + ப் + பணி = அறப்பணி
 
கட்டடம் + கலை > கட்டட + க் + கலை = கட்டடக்கலை
 
வீரம் + திலகம் > வீர + த் + திலகம் = வீரத்திலகம்
 
மரம் + பெட்டி > மர + ப் + பெட்டி = மரப்பெட்டி
 
பட்டம் + படிப்பு > பட்ட + ப் + படிப்பு = பட்டப்படிப்பு.
 
Reference:
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்.
தமிழ்ப் பாடப் புத்தகங்கள் - வகுப்புகள் எட்டு  / ஒன்பது - திருந்திய பதிப்பு 2021.
 
நன்னூல் எழுத்ததிகாரம் - மணிவாசகர் பதிப்பகம் சென்னை. பதிப்பு - சூலை, 2001.
 
தமிழ் இணையக் கல்விக்கழகம் - இணையதளம்