PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoசொற்றொடர்
சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது “சொற்றொடர்” அல்லது “தொடர்” எனப்படும்.
எ.கா. நீர் பருகினான், வெண்சங்கு ஊதினான்.
தொகைநிலைத் தொடர்
பெயர்ச்சொல்லோடு வினைச்சொல்லும் பெயர்ச்சொல்லும் சேரும் தொடரின் இடையில், வேற்றுமை உருபுகளோ, வினை, பண்பு முதலியவற்றின் உருபுகளோ தொக்கி (மறைந்து) இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட சொற்கள் ஒரு சொல் போல் நிற்குமானால் அதனைத் தொகை நிலைத் தொடர் என்று கூறுவர்.
எ.கா. கரும்பு தின்றான்.
மேற்கண்ட தொடர் கரும்பைத் தின்றான் என்னும் பொருளை உணர்த்துகிறது.
இத்தொடரில் உள்ள இரண்டு சொற்களுக்கு நடுவில் ஐ என்னும் உருபு மறைந்து நின்று, அப்பொருளைத் தருகிறது.
எனவே, இது தொகை நிலைத் தொடர் எனப்படும்.
தொகை நிலைத் தொடர் ஆறு வகைப்படும்.
அவை,
1. வேற்றுமைத் தொகை
2. வினைத்தொகை
3. பண்புத் தொகை
4. உவமைத் தொகை
5. உம்மைத் தொகை
6. அன்மொழித் தொகை
என்பன ஆகும்.
1. வேற்றுமைத் தொகை
எ.கா. மதுரை சென்றார்
இத்தொடர் மதுரைக்குச் சென்றார் என விரிந்து நின்று பொருள் தருகிறது.
கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களுக்கு இடையில் “கு” என்னும் வேற்றுமை உருபு இல்லை .
அது தொக்கி நின்று பொருளை உணர்த்துகிறது.
இவ்வாறு ஒரு தொடரில் வேற்றுமை உருபுகள் (ஐ, ஆல், கு, இன், அது, கண்) ஆகியவற்றுள் ஒன்று மறைந்து வந்து பொருள் உணர்த்துவது வேற்றுமைத் தொகை எனப்படும்.
உருபும் பயனும் உடன்தொக்க தொகை
எ.கா. தேர்ப்பாகன்
இத்தொடர் “தேரை ஓட்டும் பாகன்” என விரிந்து பொருளை உணர்த்துகிறது.
கொடுக்கப்பட்டுள்ள தேர், பாகன் என்னும் சொற்களுக்கிடை யில் “ஐ” என்னும் வேற்றுமை உருபும் “ ஓட்டும் ” என்னு ம் பொருளை விளக்கும் பயனும் மறைந்து வந்துள்ளன .
இவ்வாறு ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் பயனும் சேர்ந்து மறைந்து வருவது உருபும் பயனும் உடன் தொக்க தொகை எனப்படும். இதுவும் வேற்றுமைத் தொகையே ஆகும்.
தமிழ்த்தொண்டு (தமிழுக்குச் செய்யும் தொண்டு) நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை.
வினைத்தொகை
காலம் காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து நிற்க, வினைப் பகுதியைத் தொடர்ந்து ஒரு பெயர் வந்து ஒரு சொல்லைப் போல் நடப்பது “வினைத் தொகை” எனப்படும்.
காலம் கரந்த பெயரெச்சமே வினைத் தொகையாகும்.
எ.கா.
வீசுதென்றல்
கொல்களிறு
வீசு, கொல் என்பவை வினைப்பகுதிகள்.
இவை முறையே தென்றல், களிறு என்னும் பெயர்ச்சொற்களோடு சேர்ந்து காலத்தை வெளிப்படுத்தாத பெயரெச்சங்களாயின.
மேலும் இவை, வீசிய காற்று, வீசுகின்ற காற்று, வீசும் காற்று எனவும்
கொன்ற களிறு, கொல்கின்ற களிறு, கொல்லும் களிறு எனவும்
முக்காலத்திற்கும் பொருந்தும்படி விரிந்து பொருள் தருகின்றன.
காலம்காட்டும் இடைநிலைகள் இப்பெயரெச்சங்களில் தொக்கி இருக்கின்றன.
வினைப்பகுதியும் அடுத்துப் பெயர்ச்சொல்லும் அமைந்த சொற்றொடர்களிலேயே வினைத் தொகை அமையும்.