PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoமொழிமாற்றுப் பொருள்கோள்
செய்யுளின் ஓர் அடியில் உள்ள சொற்களை மட்டும் முன்பின்னாக மாற்றிப் பொருள் கொண்டால்
செய்யுளுக்கு உரிய சரியான பொருள் கிடைக்கும் என்பதற்காக அச்செய்யுளின் சொற்களை வரிசை முறை மாற்றிப் பொருள் கொள்வது, மொழிமாற்றுப் பொருள்கோள் எனப்படும்.
சான்று
சுரைஆழ அம்மி மிதப்ப வரையனைய
யானைக்கு நீத்து முயற்கு நிலைஎன்ப
கானக நாடன் சுனை
இப்பாடலில் சொற்கள் அமைந்துள்ளவாறே பொருள் கொண்டால் பொருத்தமில்லாப் பொருள் தரும் நிலை ஏற்படும்.
அதாவது ‘நீர்நிலையில் சுரை ஆழ்ந்து போகிறது என்றும் அம்மி மிதக்கிறது’ என்றும் முதல் அடி பொருள்படும்.
அதேபோல் இரண்டாவது அடி, ‘அந்நீர்நிலையில் யானை நிலையாக நிற்க இயலாமல் நீந்துகிறது’ என்றும், ‘முயல் நிலையாக நிற்கிறது’ என்றும் பொருள்படும்.
இவ்வாறு பொருள் கொள்வது நடைமுறைப் பொருள் கொள்ளும் முறைக்கு ஒவ்வாது.
அதனால், முதல் அடியில் உள்ள சுரை என்னும் சொல்லை மிதப்ப என்பதனோடும் (சுரை மிதப்ப), அம்மி என்பதை ஆழ என்பதனோடும் (அம்மி ஆழ) கொண்டு சேர்த்துப் பொருள் கொள்ள வேண்டும்.
இவ்வாறே இரண்டாவது அடியில் யானை என்பதை நிலை என்பதனோடும் (யானைக்கு நிலை), முயல் என்பதை நீத்து என்பதனோடும் (முயலுக்கு நீத்து) சேர்த்துப் பொருள் கொள்ளுதல் வேண்டும்.
இவ்வாறு ஓர் அடியில் உள்ள சொற்களை முன் பின்னாக மாற்றிச் சரியான பொருள் கொள்வதால் இது மொழிமாற்றுப் பொருள்கோள் ஆயிற்று.
ஏற்ற பொருளுக்கு இயையும் மொழிகளை மாற்றியோர்
அடியுள் வழங்கல்மொழி மாற்றே - நன்னூல் - 413
நிரனிறைப் பொருள்கோள்
ஒரு வரிசையில் உள்ள பொருளை வேறு ஒரு வரிசையில் உள்ள பொருளோடு பொருத்துகிறபோது,
அவ்வரிசையைப் பொருள் பொருத்தமுறப் பொருத்துவது நிரல்நிறைப் பொருள்கோள் எனப்படும்.
சான்று
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. - குறள் - 45
இப்பாடலில் முதல் வரிசையில் அன்பு, அறன் கூறப்பட்டுள்ளன.
இரண்டாவது வரிசையில்பண்பு, பயன் கூறப்பட்டுள்ளன.
இல்வாழ்க்கையில் அன்பு பண்பாகவும், அறன் பயனாகவும் அமைய வேண்டும் என்பது குறளின் கருத்து.
இவ்வாறு முதல் வரிசையில் முதலில் உள்ளதோடு இரண்டாம் வரிசையில் முதலில் உள்ளதையும், முதல் வரிசையில் இரண்டாவதாக உள்ளதோடு இரண்டாவது வரிசையில் இரண்டாவது உள்ளத்தையும் பொருத்திப் பார்ப்பது நேர் நிரல்நிறைப் பொருள்கோள் எனப்படும்.
இதற்கு மாறாக முதல் வரிசையில் முதலில் உள்ளதை இரண்டாவது வரிசையில் இரண்டாவது உள்ளதோடும் முதல் வரிசையில் இரண்டாவது உள்ளத்தை இரண்டாம் வரிசையில் முதலில் உள்ளதோடும் பொருந்திப் பார்ப்பது எதிர்நிரல்நிறைப் பொருள்கோள் எனப்படும்.
சான்று
களிறும் கந்தும் போல நளிகடற்
கூம்பும் கலனும் தோன்றும் தோன்றல்
மறந்தோர் துறைகெழு நாட்டே
களிறு - யானை
கந்து - யானை கட்டும் தறி
கூம்பு - பாய் மரம்
கலன் - தோணி
இப்பாடலில் முதல் வரிசையில் களிறு, கந்து. இரண்டாம் வரிசையில் கூம்பு, கலன் என உள்ளன.
களிறு என்பதைக் கலன் என்பதோடும் கந்து என்பதை கூம்பு என்பதோடும் பொருந்துவதால் இது எதிர் நிரல்நிறைப் பொருள்கோள் ஆகும்.
இவ்வாறு பொருந்திப் பார்ப்பது செய்யுளுக்கு உரியது என்பது கவனத்திற்கு உரியது. பெயர்களோடு வினைகளும் நிரனிறையாக வரும்.
பெயரும் வினையுமாம் சொல்லையும் பொருளையும்
வேறு நிரனிறீஇ முறையினும் எதிரினும் நேரும்
பொருள்கோள் நிரனிறை நெறியே - நன்னூல் - 414.