PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
வேற்றுமைப் புணர்ச்சியில் வரும் வல்லினம் மிகல்
 
இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை வரையிலான ஆறு வேற்றுமைகள் ஒவ்வொன்றும் புணர்ச்சியில் மூன்று வகையாக வருகின்றன.
வேற்றுமை உருபு தொக்கு (மறைந்து) வருவது. இது வேற்றுமைத்தொகை எனப்படும்.
சான்று :
 
கனி + தின்றான் = கனிதின்றான் இத்தொடருக்குக் கனியைத் தின்றான் என்று பொருள்.
 
கனி தின்றான் என்பதில் இரண்டாம் வேற்றுமை உருபாகிய ஐ தொக்கு வந்துள்ளது.
 
எனவே இது இரண்டாம் வேற்றுமைத் தொகை.
 
வேற்றுமை உருபும், அதனோடு சேர்ந்து வரும் சில சொற்களும் தொக்கு வருவது.
 
இது வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை எனப்படும்.
 
சான்று :
 
தயிர் + குடம் = தயிர்க்குடம் இத்தொடருக்குத் தயிரை உடைய குடம் என்று பொருள்.
 
தயிர்க்குடம் என்பதில் இரண்டாம் வேற்றுமை உருபாகிய ஐ என்பதும், அதனோடு சேர்ந்து வந்துள்ள உடைய என்பதும் தொக்கு வந்துள்ளன.
 
எனவே இது இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை.
 
வேற்றுமை உருபு விரிந்து வருவது. இது வேற்றுமை விரி எனப்படும்.
 
சான்று :
 
கனியை + தின்றான் = கனியைத் தின்றான் மேலே கூறிய சான்றுகளை நோக்குவோம்.
 
வல்லினம் இரண்டாம் வேற்றுமைத் தொகையில் மிகாமலும், மற்ற இரண்டிலும் மிக்கும் வந்துள்ளது புலனாகும்.
 
இதுபோல ஒவ்வொரு வேற்றுமையும் மூவகைப் புணர்ச்சியில் வல்லினம் மிக்கும், மிகாமலும் வரும்.
 
இனி வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லினம் மிகும் இடங்களைப் பார்ப்போம்.
 
(i) இரண்டாம் வேற்றுமை விரியின் (ஐ உருபின்) முன் வரும் வல்லினம் மிகும்.
 
சான்று :
 
ஒலியை + குறை = ஒலியைக் குறை
பாயை + சுருட்டு = பாயைச் சுருட்டு
கதவை + தட்டு = கதவைத் தட்டு
மலரை + பறி = மலரைப் பறி
 
(ii) நான்காம் வேற்றுமை விரியின் (கு உருபின்) முன்வரும் வல்லினம் மிகும்.
 
சான்று :
  
எனக்கு + கொடு = எனக்குக் கொடு
வீட்டுக்கு + தலைவி = வீட்டுக்குத் தலைவி
ஊருக்கு + போனான் = ஊருக்குப் போனான்
 
(iii) நான்காம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி அஃறிணையாயின் அதன்முன் வரும் வல்லினம் மிகும்.
 
சான்று :
 
குறிஞ்சி + தலைவன் = குறிஞ்சித் தலைவன் (குறிஞ்சிக்குத் தலைவன்)
படை + தளபதி = படைத்தளபதி (படைக்குத் தளபதி)
கூலி + படை = கூலிப்படை (கூலிக்குப் படை)