PDF chapter test TRY NOW
ஆரோக்கியம்
ஆரோக்கியமே மிகச் சிறந்த செல்வம். அதை நாம் பேணிப் பாதுகாத்து நல்ல உடல் நலத்துடன் இருந்தால் நல்ல மனது மட்டுமல்லாமல் அதோடு கூடிய நல்லறிவையும், செல்வத்தையும் பெற்று வாழ்வில் சிறந்து விளங்க முடியும்.
நம் ஆரோக்கியத்தைச் சிறந்த முறையில் காக்க, சுகாதாரம், சத்தான உணவு, உடற்பயிற்சியோடு கூடிய ஓய்வு மற்றும் நல்ல தூக்கம் மிகவும் அவசியம்.
உடல்நலம்
நல்ல மனநிலை, உடல் வலிமை, நோய் இல்லாத வாழ்வு, மன அழுத்தமில்லாமல் இருந்தால் ஒரு மனிதன் மிகவும் ஆரோக்கியமானவராகக் கருதப்படுகிறார்.
எளிமையான வார்த்தைகளில் கூறினால் , ஆரோக்கியம் என்பது ஒரு நபரின் உடல், உணர்ச்சி மற்றும் உளவியலைக் குறிக்கிறது.
சுகாதாரம்
தூய்மை, பாதுகாப்பான குடிநீர், கழிவுநீரை அகற்றுதல் ஆகியவற்றின் மூலம் நோய்களைத் தடுக்கும் நல்ல பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகள் சுகாதாரம் எனப்படும்.
சுகாதாரம் என்பது நல்ல ஆரோக்கியத்தையும், மனதை மேம்படுத்தவும், பராமரிக்கவும் செய்யப்படும் அனைத்து செயல்பாடுகளையும் குறிக்கிறது.
தூய்மை
தூய்மை என்பது தனிப்பட்ட மற்றும் சுற்றுப்புற சுகாதாரத்தைப் பராமரிப்பதாகும்.
நல்ல ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது தூய்மையான நிலை. நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள, உடல் ஆரோக்கியத்தைப் பேண தவறாமல் குளிப்பது, உடைகள் மற்றும் சுற்றுப்புறங்களைச் சுத்தம் செய்வது, சுகாதாரமற்ற உணவுப் பொருட்களை உட்கொள்வதைத் தவிர்ப்பது மிக அவசியம்.

பல்வேறு வகையான சுத்தம் மற்றும் சுகாதாரத்தை விளக்கும் படம்
மலம்-வாய் வழியாக நோய் பரவுதல்
மலம் - வாய் வழி நோய்ப் பரவும் முறை என்பது ஒரு குறிப்பிட்ட நோய் பரவும் பாதையை விவரிக்கிறது. இதில் மலத்துகள்களில் உள்ள நோய்க்கிருமிகள் ஒருவரிடமிருந்து மற்றொரு நபரின் வாய்க்கு, விலங்குகளின் கழிவுகளுடன் கூடிய உணவு மற்றும் மாசுபடுத்தபட்ட தண்ணீர் மூலமாக பரவுகிறது.

மலம் -வாய் வழியாக நோய் பரவும் முறையை விளக்கும் படம்
தனிநபர் சுகாதாரம்
ஒரு குறிப்பிட்ட மனிதன் ஆரோக்கியமாய் வாழ்வதற்கு தன்னுடைய உடல் மற்றும் மன தேவைகளைச் சரிசெய்து உடல் நலத்தைப் பாதுகாப்பதைத் தனிநபர் சுகாதாரம் என்று அழைக்கிறோம்.
மேலும், உடலைச் சுத்தம் செய்வதும், அழகுபடுத்துவதும், சீர் படுத்துவதும் தனிநபர் சுகாதாரத்தின் ஓர் அங்கமாகக் கருதப்படுகிறது.

தனிநபர் சுகாதார பராமரிப்பு
தனிநபர் சுகாதாரத்தைச் சீரழிப்பதற்குக் காரணமாய் இருப்பவை நோய்க்கிருமிகள் ஆகும்.