PDF chapter test TRY NOW
இலக்கண முறைப்படி பிழையுடையது எனினும், இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி, பிழை அன்று என ஏற்றுக் கொள்ளப்படுவது வழுவமைதி ஆகும்.
1. திணை வழுவமைதி
“என் அம்மை வந்தாள்”
என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது திணை வழுவமைதி ஆகும்.
இங்கு உவப்பின் காரணமாக அஃறிணை, உயர்திணையாகக் கொள்ளப்பட்டது.
2. பால் வழுவமைதி
“வாடா இராசா, வாடா கண்ணா ”
என்று தன் மகளைப் பார்த்துத் தாய் அழைப்பது பால் வழுவமைதி ஆகும்.
இங்கு உவப்பின் காரணமாகப் பெண்பால், ஆண்பாலாகக் கொள்ளப்பட்டது.
3. இட வழுவமைதி
மாறன் என்பான் தன்னைப் பற்றிப் பிறரிடம் கூறும் போது,
“இந்த மாறன் ஒரு நாளும் பொய் கூறமாட்டான்” என,
தன்மையினைப் படர்க்கை இடத்தில் கூறுவது இடவழுவமைதி ஆகும்.
4. கால வழுவமைதி
குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார்.
இத்தொடர், குடியரசுத் தலைவர் நாளை வருவார் என அமைதல் வேண்டும்.
அவ்வாறு அமையவில்லை என்றாலும் நாம் பிழையாகக் கருதுவதில்லை.
ஏனெனில் அவரது வருகையின் உறுதித் தன்மை நோக்கிக் கால வழுவமைதியாக ஏற்றுக் கொள்கிறோம்.
5. மரபு வழுவமைதி
“கத்துங் குயிலோசை - சற்றே வந்து காதிற் படவே ணும்”- பாரதியார்.
குயில் கூவும் என்பதே மரபு, குயில் கத்தும் என்பது மரபு வழு ஆகும்.
இங்குக் கவிதையில் இடம்பெற்றிருப்பதால் இது மரபு வழுவமைதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
Reference:
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்.
தமிழ்ப் பாடப் புத்தகம் - வகுப்பு பத்து - திருந்திய பதிப்பு 2020.
நன்னூல் எழுத்ததிகாரம் - மணிவாசகர் பதிப்பகம் சென்னை. பதிப்பு - சூலை, 2001.