PDF chapter test TRY NOW
|
*காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும் – அங்குத்
தூணில் அழகியதாய் – நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் – அந்தக்
காணி நிலத்திடையே – ஓர் மாளிகை
கட்டித் தரவேண்டும் – அங்குக்
கேணி அருகினிலே– தென்னைமரம்
கீற்றும் இளநீரும்
பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம்
பக்கத்திலே வேணும்* – நல்ல
முத்துச் சுடர்போலே– நிலாவொளி
முன்பு வரவேணும் – அங்குக்
கத்துங் குயிலோசை– சற்றே வந்து
காதில் படவேணும் – என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே– நன்றாய் இளம்
தென்றல் வரவேணும்.
- பாரதியார்
சொல்லும் பொருளும்:
காணி - நிலஅளவைக் குறிக்கும் சொல்
மாடங்கள் - மாளிகையின் அடுக்குகள்
சித்தம் - உள்ளம்.
பாடலின் பொருள்:
- காணி அளவு நிலம்வேண்டும்.
- அங்கு ஒரு மாளிகைகட்டித்தர வேண்டும்.
- அழகான தூண்களையும் தூய நிறமுடைய மாடங்களையும் அது கொண்டிருக்க வேண்டும்.
- நல்ல நீரையுடைய கிணறும் அங்கே இருக்க வேண்டும்.
- இளநீரும் கீற்றும் தரும் தென்னை மரங்கள் வேண்டும்.
- அங்கே முத்து போன்ற நிலவொளி வீசவேண்டும்.
- காதுக்கு இனிய குயிலின் குரலோசைக் கேட்க வேண்டும்.
- உள்ளம் மகிழுமாறு இளந்தென்றல் தவழ வேண்டும்.
நூல் வெளி:
- இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் பாரதியார்.
- அவரது இயற்பெயர் சுப்பிரமணியன்.
- இளமையிலேயே சிறப்பாகக் கவிபாடும் திறன் பெற்றவர்.
- எட்டயபுர மன்னரால் பாரதி என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவர்.
- தம் கவிதையின் வழியாக விடுதலை உணர்வை ஊட்டியவர்.
- மண் உரிமைக்காகவும் பெண் உரிமைக்காகவும் பாடியவர்.
- நாட்டுப் பற்றும் மொழிப் பற்றும் மிக்க பாடல்கள் பலவற்றைப் படைத்தவர்.
- பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு போன்ற பல நூல்களை இயற்றி உள்ளார்.
- பாரதியார் கவிதைகள் என்னும் தொகுப்பில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது.
- பாரதியார் கவிதைகள் தொகுப்பு :
2.தெய்வப் பாடல்கள்
1.தோத்திரப் பாடல்கள்
11.காணி நிலம் என்னும் தலைப்பில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது.
Reference:
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திருத்திய பதிப்பு (2020). ஆறாம் வகுப்பு முதல் பருவம். இயற்கை - காணிநிலம் (ப.எண். 29-31) தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் வெளியிடப்பட்டது.