PDF chapter test TRY NOW

தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு
 
இத்தொடரில் வெள்ளை என்னும் சொல் வெண்மை என்னும் நிறப் பொருளைத் தருகிறது. இஃது இயல்பான பெயர்ச்சொல் ஆகும்.
 
வீட்டுக்கு வெள்ளை அடித்தான்.
 
இத்தொடரில் வெள்ளை என்பது வெண்மை நிறத்தைக் குறிக்காமல் வெண்மை நிறமுடைய சுண்ணாம்பைக் குறிக்கிறது.
 
இவ்வாறு ஒன்றன் பெயர் அதனைக் குறிக்காமல் அதனோடு தொடர்புடைய வேறு ஒன்றிற்கு ஆகி வருவது ஆகுபெயர் எனப்படும்.
 
பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில் ஆகிய ஆறு வகையான
 
பெயர்ச்சொற்களிலும் ஆகுபெயர்கள் உண்டு.
 
பொருளாகுபெயர்
 
மல்லிகை சூடினாள்.
 
மல்லிகை என்னும் ஒரு முழுப்பொருளின் பெயர் அதன் ஓர் உறுப்பாகிய மலரைக் குறிக்கிறது.
 
இவ்வாறு பொருளின் பெயர் அதன் சினையாகிய உறுப்புக்கு ஆகிவருவது பொருளாகுபெயர் எனப்படும்.
 
இதனை முதலாகு பெயர் எனவும் கூறுவர்.
 
இடவாகுபெயர்
 
சடுகுடு போட்டியில் தமிழ்நாடு வெற்றி பெற்றது.
 
தமிழ்நாடு என்னும் பெயர் அவ்விடத்தைச் சேர்ந்த விளையாட்டு அணியைக் குறிப்பதால் இஃது இடவாகுபெயர் -ஆகும்.
 
காலவாகுபெயர்
 
திசம்பர் சூடினாள்
 
இத்தொடரில் திசம்பர் என்னும் காலப்பெயர் அக்காலத்தில் மலரும் பூவைக் குறிப்பதால் இது காலவாகுபெயர் ஆயிற்று.
 
சினையாகுபெயர்
 
தலைக்கு ஒரு பழம் கொடு
 
இத்தொடருக்கு ஆளுக்கு ஒரு பழம் கொடு என்பது பொருளாகும். இவ்வாறு சினையின் (உறுப்பின்) பெயர் முதலாகிய பொருளுக்கு ஆகிவருவது சினையாகுபெயர் எனப்படும்.