PDF chapter test TRY NOW
பண்பாகுபெயர்
இனிப்பு தின்றான்
இத்தொடரில் இனிப்பு என்னும் பண்புப் பெயர் தின்பண்டத்தைக் குறிப்பதால் பண்பாகுபெயர் ஆயிற்று.
தொழிலாகுபெயர்
பொங்கல் உண்டான்
இத்தொடரில் பொங்கல் (பொங்குதல்) என்னும் தொழிற்பெயர் அத்தொழிலால், உருவான உணவினைக் குறிப்பதால் இது தொழிலாகுபெயர் ஆகும்.
இரட்டைக்கிளவி
தங்கை விறுவிறுவென நடந்து சென்று தோட்டத்தில் மலர்ந்த மலர்களைக் கலகலவெனச் சிரித்தபடியே மளமளவெனக் கொய்யத் தொடங்கினாள்.
இத்தொடரிலுள்ள விறுவிறு,கலகல,மளமள ஆகிய சொற்களைக் கவனியுங்கள்.
இவை, ஒவ்வொன்றிலும் அசைச் சொற்கள் இரண்டிரண்டாக இணைந்து வந்துள்ளன.
அவற்றைப் பிரித்துப் பார்த்தால் பொருள் தரவில்லை.
இவ்வாறு இரட்டையாக இணைந்து வந்து பிரித்தால் தனிப்பொருள் தராத சொற்களை இரட்டைக் கிளவி என்பர்.
அடுக்குத்தொடர்
சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர் அமுதன் திடீரென. பாம்பு பாம்பு பாம்பு என்று கத்தினான். எங்கே எங்கே? என்று கேட்டபடியே மற்ற சிறுவர்கள் அவளருகே ஓடி வந்தனர்.
"இல்லை இல்லை சும்மாதான் சொன்னேன்" என்று சொல்லிச் சிரித்தபடியே ஓடினான் அமுதன், "அவனைப் பிடி பிடி பிடி பிடி" என்று கத்திக்கொண்டே மற்றவர்கள் துரத்தினார்கள்.
இப்பகுதியில், சில சொற்கள் இரண்டு மூன்று, நான்கு முறை இடம்பெற்றுள்ளன.
இவ்வாறு, அச்சம், விரைவு, சினம் போன்ற காரணங்களால் ஒரு சொல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை தொடர்ந்து வருவதை அடுக்குத் தொடர் என்பர். அடுக்குத் தொடரில் பலமுறை இடம்பெறும் ஒவ்வொரு சொல்லும் பொருளுடையது.
அடுக்குத்தொடர் இரட்டைக்கிளவி ஒப்பீடு
அடுக்குத்தொடரில் உள்ள சொற்களைத் தனித்தனியே பிரித்துப் பார்த்தாலும் அவற்றுக்குப் பொருள்உண்டு.
இரட்டைக் கிளவியைப் பிரித்தால் அது பொருள் தருவதில்லை.
அடுக்குத்தொடரில் ஒரே சொல் இரண்டு முதல் நான்கு முறை வரை வரும்.
இரட்டைக்கிளவியில் ஒரு சொல் இரண்டு முறை மட்டுமே வரும்.
அடுக்குத் தொடரில் சொற்கள் தனித்தனியே நிற்கும் இரட்டைக் கிளவியில் சொற்கள் இணைந்தேநிற்கும்.
அடுக்குத் தொடர் விரைவு, வெகுளி, உவகை, அச்சம், அவலம் ஆகிய பொருள்கள் காரணமாக வரும்.
இரட்டைக்கிளவி வினைக்கு அடைமொழியாகக்குறிப்புப் பொருளில் வரும்.