PDF chapter test TRY NOW
வல்லினம் மிகா இடங்கள்
எழுவாய்ச் சொற்களை அடுத்து வல்லினம் மிகாது.
(எ.கா.) தம்பி படித்தான் , யானை பிளிறியது.
அது, இது, எது ஆகிய சொற்களை அடுத்து வல்லினம் மிகாது.
(எ.கா.) அது சென்றது. இது பெரியது, எது கிடைத்தது?
பெயரெச்சம், எதிர்மறைப் பெயரெச்சம் ஆகியவற்றை அடுத்து வல்லினம் மிகாது.
(எ.கா.) எழுதிய பாடல், எழுதாத பாடல்.
இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து வரும் இடங்களில் (இரண்டாம் வேற்றுமைத்தொகை) வல்லினம் மிகாது.
(எ.கா.) இலை பறித்தேன், காய் தின்றேன்
உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் மென்தொடர்க் குற்றியலுகரமாகவோ, இடைத்தொடர்க் குற்றியலுகரமாகவோ இருந்தால் வல்லினம் மிகாது.
(எ.கா.) தின்று தீர்த்தான், செய்து பார்த்தாள்.
வினைத்தொகையில் வல்லினம் மிகாது.
(எ.கா.) எழுதுபொருள், சுடுசோறு
அப்படி, இப்படி, எப்படி ஆகிய சொற்களைத் தவிர, படி என முடியும் பிறசொற்களை அடுத்து வல்லினம் மிகாது.
(எ.கா.) எழுதும்படி சொன்னேன். பாடும்படி கேட்டுக்கொண்டார்.
உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது.
(எ.கா.) தாய்தந்தை, வெற்றிலைபாக்கு