PDF chapter test TRY NOW

நாம் எளிய முறையில் திருக்குறளை இங்கு அலகிடலாம்.
 
வெண்பாவில் இயற்சீரும், வெண்சீரும் மட்டுமே வரும்; பிற சீர்கள் வாரா.
 
தளைகளில் இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் மட்டுமே வரும்; பிற தளைகள் வாரா.
 
ஈற்றடியின் ஈற்றுச் சீர் ஓரசைச் சீர்களில் முடியும். இப்போது அலகிடலாம்.
 
பிறர்நாணத் தக்கது தான்நாணானாயின்
அறம்நாணத் தக்க துடைத்து.
  
வரிசை - சீர் - அசை - வாய்பாடு
 
1. பிறர்/நா/ணத்/ - நிரை நேர் நேர் - புளிமாங்காய்
  
2. தக்/கது/ - நேர் நிரை - கூவிளம்
  
3. தான்/நா/ணா/ - நேர் நேர் நேர் - தேமாங்காய்
  
4. னா/யின்/ - நேர் நேர் - தேமா
  
5. அறம்/நா/ணத்/ - நிரை நேர் நேர் - புளிமாங்காய்
  
6. தக்/க/ - நேர் நேர் - தேமா
  
7. துடைத்/து - நிரைபு - பிறப்பு
 
பாட நூலில் வந்துள்ள பிற குறட்பாக்களுக்கும் அலகிடும் பயிற்சி மேற்கொள்க.
 
தளை
 
பாடலில், நின்ற சீரின் ஈற்றசையும், அதனையடுத்து வரும் சீரின் முதல் அசையும் பொருந்துதல் ’தளை ’எனப்படும்.
 
இது ஒன்றியும் ஒன்றாமலும் வரும்.
 
அது ஏழு வகைப்படும்.
 
1. நேரொன்றாசிரியத்தளை – மா முன் நேர்
 
2. நிரையொன்றாசிரியத்தளை – விளம் முன் நிரை
 
3. இயற்சீர் வெண்டளை – மா முன் நிரை, விளம் முன் நேர்
 
4. வெண்சீர் வெண்டளை – காய் முன் நேர்
 
5. கலித்தளை - காய் முன் நிரை
 
6. ஒன்றிய வஞ்சித்தளை – கனி முன் நிரை
 
7. ஒன்றா வஞ்சித்தளை - கனி முன் நேர்
 
அடி
 
இரண்டும் இரண்டிற்கு மேற்பட்ட சீர்களும் தொடர்ந்து வருவது’ அடி’ எனப்படும்.
 
அவை ஐந்து வகைப்படும்.
 
இரண்டு சீர்களைக் கொண்டது குறளடி;
 
மூன்று சீர்களைக் கொண்டது சிந்தடி;
 
நான்கு சீர்களைக் கொண்டது அளவடி;
 
ஐந்து சீர்களைக் கொண்டது நெடிலடி; ஆறு சீர் அல்லது அதற்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டது கழிநெடிலடி.