PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
இந்த கோட்பாட்டில், மூன்று வகையான வாஸ்குலார்  கற்றைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளன.
 
சைலம் மற்றும் புளோயம் ஆகியவை தாவரத்தின் வாஸ்குலார் திசு அமைப்பில் இருக்கும் திசுக்கள் ஆகும். இந்தத் திசு அமைப்பு தாவரத்திற்கு உணவு, நீர் மற்றும் கனிமங்களை வேரிலிருந்து அதன் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்ல உதவுகின்றது.
  • சைலம் நீர் மற்றும் கனிமங்களைக் கடத்த உதவுகிறது.
  • புளோயம் உணவுப் பொருட்களைக் கொண்டு செல்கிறது.
வாஸ்குலார் கற்றைகள் மூன்று வகைகளாக வகைப்படுத்தபட்டுள்ளன.
  1. ஆரப்போக்கு அமைந்தவை
  2. ஒன்றிணைந்தவை
  3. சூழ்ந்தமைந்தவை
YCIND20220804_4089_Plant anatomy and physiology_02.png
வாஸ்குலார் கற்றைகளின் வகைகள்
 
1. ஆரப் போக்கு அமைந்த வாஸ்குலார் கற்றை:
 
ஆரப் போக்கு அமைந்த வாஸ்குலார் கற்றையில் வாஸ்குலார் திசுக்களான சைலமும் புளோயமும் வெவ்வேறு ஆரங்களில் அடுத்தடுத்து அமைந்திருக்கும். எ.கா. வேர்
  
2. ஒன்றிணைந்த வாஸ்குலார் கற்றை:
 
ஒன்றிணைந்த வாஸ்குலார் கற்றையில் வாஸ்குலார் திசுக்களான சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் ஒரு கற்றையில் அமைந்திருக்கும். இவை இருவகைப் படும். அவை;
 
அ. ஒருங்கமைந்தவை
ஆ. இருபக்க ஒருங்கமைந்தவை
 
அ. ஒருங்கமைந்தவை:
 
இவ்வகையில் சைலம் உட்பகுதியை நோக்கியும், புளோயம் வெளிப்புறத்தை நோக்கியும் அமைந்திருக்கும்.
 
கேம்பியம் சைலத்திற்கும், புளோயத்திற்கும் இடையில் காணப்பட்டால் அவை திறந்த ஒருங்கமைந்த  வாஸ்குலார் கற்றை  எனப்படும். எ.கா. இருவிதையிலைத் தாவர தண்டு
  
கேம்பியம் சைலத்திற்கும், புளோயத்திற்கும் இடையில் காணப்படவில்லையென்றால் அவை மூடிய ஒருங்கமைந்த  வாஸ்குலார் கற்றை எனப்படும். எ.கா. ஒருவிதையிலைத் தாவர தண்டு
  
ஆ. இருபக்க ஒருங்கமைந்தவை:
 
இருபக்க ஒருங்கமைந்தவை வகை வாஸ்குலார் கற்றையில் புளோயம், சைலத்திற்கு உட்பக்கமும் வெளிப் பக்கமும் காணப்படுகிறது. எ.கா குகர்பிட்டா
  
3. சூழ்ந்தமைந்த வாஸ்குலார் கற்றை:
 
சூழ்ந்தமைந்த வாஸ்குலார் கற்றையில் புளோயத்தை சுற்றி சைலம் அல்லது சைலத்தைச் சுற்றி புளோயம் சூழ்ந்து காணப்படும்.
 
சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை:
 
இவ்வகை வாஸ்குலார் கற்றையில் சைலம் முழுவதுமாக புளோயத்தை சூழ்ந்து காணப்படும். எ.கா டிரசீனா
 
புளோயம் சூழ் வாஸ்குலார் கற்றை:
 
இவ்வகை வாஸ்குலார் கற்றையில் புளோயம் முழுவதுமாக சைலத்தைச் சூழ்ந்து காணப்படும். எ.கா பெரணிகள்
  
எண்டார்க் - உள்நோக்கிய சைலம்:
 
மையப்பகுதியை நோக்கி புரோட்டோசைலமும், வெளிப்புறத்தை நோக்கி மெட்டாசைலமும் அமைந்திருப்பதே எண்டார்க் எனப்படும். எ.கா. தண்டு
 
எக்ஸார்க் - வெளிநோக்கிய சைலம்:
 
மையப்பகுதியை நோக்கி மெட்டாசைலமும், வெளிப்புறத்தை நோக்கி புரோட்டோசைலமும் அமைந்திருப்பதே எக்ஸார்க் எனப்படும். எ.கா. வேர்
 
YCIND20220804_4089_Plant anatomy and physiology_03.png
எண்டார்க் மற்றும் எக்ஸார்க்