PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoவேர் என்பது தாவரங்களில் காணப்படும் ஓர் உறுப்பாகும். பெரும்பாலும் இருவிதையிலைத் தாவர வேர், ஆணிவேர்த் தொகுப்பைக் கொண்டவை. அவை கீழ்க்காணும் நான்கு மிக முக்கியமான பணிகளைச் செய்யத் தாவரங்களுக்கு உதவுகின்றன.
தாவரங்களை நிலத்துடன் பிணைத்து வைத்திருக்கவும், நிலத்திலிருந்து நீர் மற்றும் கனிம ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும், உறிஞ்சிய நீர் மற்றும் கனிமங்களைத் தண்டு மற்றும் இலைகளுக்குக் கொண்டு செல்லவும், உணவைச் சேமித்து வைத்திருக்கவும் வேர்கள் உதவுகின்றன.
இருவிதையிலைத் தாவர வேரின் குறுக்கு வெட்டுத் தோற்றம்
இரு வித்திலைத் தாவர வேரை வெட்டி அவற்றின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை நுண்ணோக்கி மூலம் உற்று நோக்கும் பொழுது கீழ்க்காணும் பகுதிகளை நம்மால் காண இயலும்.
i. எபிபிளமா:
இரு விதையிலைத் தாவர வேரின் வெளிப்புற அடுக்கு எபிபிளமா அல்லது ரைசோடெர்மிஸ் ஆகும். இவ்வடுக்கில் ஒரே ஒரு செல்லாலான வேர்த் தூவிகள் காணப்படும் ஆனால் கீயூட்டிக்கிள் மற்றும் புறத்தோல் துளைகள் காணப்படுவதில்லை. இவ்வடுக்கு பைலிபெரஸ் அடுக்கு அல்லது ரைசோடெர்மிஸ் என்றும் அழைக்கப்படுகிறது.
ii. புறணி:
இரு விதையிலைத் தாவர வேரின் குறுக்குவெட்டுப் பிரிவில், பாரன்கைமா செல்களாலான பல அடுக்குகள் பெரிய இடைவெளிகளுடன் நெருக்கமில்லாமல் அமைந்திருக்கும், இவை புறணி என்று அழைக்கப்படுகிறது. உணவு மற்றும் தண்ணீரைச் சேமிக்க இப்பகுதி உதவுகின்றன.
iii. அகத்தோல்:
அகத்தோல் என்பது புறணியின் கடைசி அடுக்கைக் குறிக்கிறது. இந்த அடுக்கு ஒரே வரிசையிலமைந்த பீப்பாய் வடிவ மிக நெருக்கமான செல்களாலானது. மேலே உள்ள படத்தைக் கவனித்தால், அகத்தோலின் உட்புற கிடைமட்ட சுவர்களிலும் மற்றும் அதன் ஆரச் சுவர்களிலும் காஸ்பேரியன் பட்டையை நாம் காணலாம். புரோட்டாக் சைலக் கூறுகளுக்கு எதிரேயுள்ள அகத்தோல் செல்களில் காஸ்பேரியன் பட்டைகள் இல்லாமல் உள்ளன. அவ்வகை செல்கள் வழிச் செல்கள் எனப்படும். இந்த செல்கள் நீர் மற்றும் இதர பொருட்களைப் புறணிப் பகுதியிலிருந்து சைலத்திற்குக் கடத்த உதவுகின்றன.
iv. ஸ்டீல்:
ஸ்டீல் என்பது அகத்தோலின் உட்புறமாகக் காணப்படும் அனைத்து பகுதிகளாகும். ஸ்டீல் பகுதி வாஸ்குலார் கற்றைகள், பெரிசைக்கிள் மற்றும் பித் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
அ. பெரிசைக்கிள்:
பெரிசைக்கிள் எனப்படுவது அகத்தோலின் உட்புறத்தில் காணப்படும் பாரன்கைமா செல்களாலான ஓரடுக்காகும். பக்கவாட்டு வேர்கள் இந்த அடுக்கிலிருந்து தான் தோன்றுகிறது.
ஆ. வாஸ்குலார் தொகுப்பு:
இரு விதையிலைத் தாவர வேரில் வாஸ்குலார் கற்றைகள் ஆரப்போக்கமைவில் அமைந்துள்ளன. மேலும், இத்தொகுப்பில் சைலம் வெளிநோக்கியும், நான்கு முனை கொண்டனவாகவும் உள்ளன. அதுமட்டுமல்லாமல், சைலம் மற்றும் புளோயத்திற்கிடையில் இணைப்புத்திசு உள்ளது அவை பாரன்கைமா செல்களாலானது.
இ. பித்:
இது இளம் வேர்களில் மட்டுமே உள்ளது ஆனால் முதிர்ந்த வேர்களில் பித் காணப்படுவதில்லை.