PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
உலகின் மிக இன்றியமையாத வேதியியல் செயலாக ஒளிச்சேர்க்கை கருதப்படுகிறது. ஏனெனில்  மனிதர்களும், விலங்குகளும் உயிர் வாழத் தேவையான ஆக்ஸிஜன் இந்த நிகழ்வின் மூலமாகவே தயாரிக்கப் படுகின்றன. இந்த கோட்பாட்டில் ஒளிச்சேர்க்கை, ஒளிச்சேர்க்கை நடைபெறும் இடங்கள், ஒளிச்சேர்க்கை நிறமிகளான  முதன்மை மற்றும் துணை நிறமிகள் குறித்துக் காண்போம்.
தற்சார்பு ஊட்ட உயிரினங்களான தாவரங்கள், ஆல்காக்கள் மற்றும் பச்சைய நிறமிகளைக் கொண்ட சில வகை பாக்டீரியாக்கள் தமக்குத் தேவையான உணவைச் சூரிய ஒளியினை உபயோகித்து உற்பத்தி செய்யும் நிகழ்வே ஒளிச்சேர்க்கை அல்லது  ஒளித்தொகுப்பு எனப்படும்.
ஒளிச்சேர்க்கை என்பது 'ஒளியின் உதவியால் உருவாக்கப்படுதல்' என்று பொருள்படும்.  ஆங்கிலத்தில் ஒளிச்சேர்க்கை என்பது photosynthesis (photo = light, synthesis = to build) எனப்படும்.
 
Photosynthesis என்ற சொல்லில்  photo என்பது ஒளியினையும் synthesis என்பது தயாரித்தலையும் குறிக்கின்றன. மேற்கூறியச் சொற்கள் அளிக்கும் பொருளிலிருந்தே தாவரங்கள் ஒளியைப் பயன்படுத்தி உணவைத்  தயாரிக்கின்றன என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
 
தாவரங்கள் சூரியனிடமிருந்து பெறப்படும் ஒளியை நேரடியாகப் பயன்படுத்தி  உணவைத் தயாரிக்க முடியாது.  மாறாக அவை ஒளிச்சேர்க்கையின் போது, ஒளியாற்றலை வேதியாற்றலாக மாற்றியே பயன்படுத்துகின்றன.
YCIND300520223817Plantphysiology1.png
ஒளிச்சேர்க்கை நிகழ்ச்சியை விளக்கும்  விளக்கப்படம்
 
பசுங்கணிகம் என்னும் நுண்ணுறுப்பில் ஒளிச்சேர்க்கை நிகழ்வு நடை பெறுகிறது. இந்நிகழ்வில் கார்பன்-டை-ஆக்ஸைடு நீருடன் சேர்ந்து சூரிய ஒளி மற்றும் பச்சையம் முன்னிலையில், கார்போஹைட்ரேட்டாக மாற்றம் அடைகின்றது. அதுமட்டுமல்லாமல் மிக முக்கியமாக இந்நிகழ்ச்சியின் பொழுது உயிரினங்களின் வாழ்வாதாரமான ஆக்ஸிஜன் வாயு (உயிர்வளி) வெளியேற்றப் படுகின்றது. அதாவது ஒளிச்சேர்க்கையில் தாவரங்கள் கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவை உள்ளே இழுத்து ஆக்ஸிஜன் வாயுவை வெளியேற்றம் செய்கிறது.
 
ஒளிச்சேர்க்கையின் ஒட்டுமொத்த சமன்பாடு கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
 
6CO2+12H2OChlorophyllSunlightC6H12O6+6H2O+6O2
கார்பன் டைஆக்ஸைடு  +  நீர்  →  குளுக்கோஸ்  +  நீர்  +  ஆக்ஸிஜன்
 
ஒளிச்சேர்க்கை நடைபெறும் இடங்கள்:

தாவரச் செல்களினுள்ளே இருக்கும் பசுங்கணிகம் என்னும் நுண்ணுறுப்பில் தான் ஒளிச்சேர்க்கை நிகழ்வு நடைபெறுகிறது என்பதை நாம் ஏற்கெனவே அறிந்து கொண்டோம். பசுங்கணிகத்தில் தான் இலைகளுக்கும், தண்டுகளுக்கும் பச்சை நிறமளிக்கும் பச்சையம் என்னும் நிறமி உருவாக்கப்படுகின்றது. இவை பச்சை நிறமளிப்பதோடு மட்டுமல்லாமல் இந்த நிறமி ஒளிச்சேர்க்கை நடைபெறவும் காரணமாயிருக்கின்றது. தாவரங்களில் பெரும்பாலும் பசுமையான பகுதியான இலைகளில் தான் ஒளிச்சேர்க்கை நடைபெறுகின்றன.
 
YCIND20220821_4275_Plant anatomy_01.png
பசுங்கணிகத்தின் அமைப்பு
 
ஒளிச்சேர்க்கை நிறமிகள்:
 
தாவர ஒளிச்சேர்க்கையில் ஈடுபடும் நிறமிகள் ஒளிச்சேர்க்கை நிறமிகள் என அழைக்கப்படுகின்றன. இவை ஒளிச்சேர்க்கை செயல்முறை நடைபெறத்  தேவையான ஒளியை உறிஞ்சுவதற்குக் காரணமானவையாக உள்ளது.
 
ஒளிச்சேர்க்கை நிறமிகள் இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
  1. முதன்மை நிறமிகள்
  2. துணை நிறமிகள்
முதன்மை நிறமிகள்:
 
முதன்மை நிறமிகளுள் பச்சையம் - a மிக முக்கியமானது. இந்நிறமி  சூரிய ஆற்றலை அதிகமாகக் கவர்ந்திழுக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. இதனால் இவை சூரிய ஆற்றலை வேதி ஆற்றலாக (குளுக்கோஸாக) மாற்றுகின்றன. ஆகவே இது வினைமையம் எனவும் அழைக்கப்படுகிறது.
 
துணை நிறமிகள்:
 
பச்சையம் - b மற்றும் கரோட்டினாய்டு போன்ற  நிறமிகள் துணை நிறமிகள் என அழைக்கப்படுகின்றன. இவ்வகை நிறமிகள் சூரிய ஆற்றலைக் கவர்ந்து முதன்மை நிறமிக்கு அனுப்பும் தன்மையைப் பெற்றிருக்கின்றது . ஆகவே  இவை ஏற்பி நிறமி மூலக்கூறுகள் மையம் எனவும் அழைக்கப்படுகிறது.
Important!
முதன்மை நிறமிகள் மற்றும் துணை நிறமிகள் இரண்டும் இணைவதையே ஒளித்தொகுப்பு எனக்  கூறுவர்.