PDF chapter test TRY NOW
குமிழ்கள் வெளியேறுதல், வெப்பம் வெளியிடப்படுதல், நிறமாற்றம், மண மாற்றம், வீழ்படிவு உருவாவது போன்றவை வேதி மாற்றம் நிகழ்ந்துள்ளதைச் சுட்டும் குறியீடுகள் ஆகும்.
i. ஒரு சோதனைக்குழாயில் சிறிதளவு தூளாக்கிய முட்டை ஒட்டுடன் எலுமிச்சைச் சாற்றினைச் சேர்க்கும் பொழுது சிறு குமிழ்களாக கார்பன் டை ஆக்சைடு வாயு உருவாவதை காணலாம். இரு பொருள்களுக்கு இடையில் வேதி வினை நிகழ்வதை சுட்டுகிறது எனவே, குமிழ்கள் வெளியேறுதல் என்ற குறியீட்டின் மூலம் இங்கு வேதியியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பதை குறிக்கலாம்.

குமிழ்கள்
ii. சுட்ட சுண்ணாம்புடன் (கால்சியம் ஆக்ஸைடு) நீரினைச் சேர்க்கும் பொழுது அதிகளவு வெப்பம் வெளியேறி தெளிந்த சுண்ணாம்பு (கால்சியம் ஹைட்ராக்சைடு) உருவாவதை காணலாம். எனவே இங்கு வெப்பத்தின் மூலம் வேதியியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பதை குறிக்கலாம். இதில் வெப்பம் வெளியேறுவது வேதி மாற்றத்தினைச் சுட்டும் குறியீடாகும்.

வெப்பம் வெளியிடப்படுதல்
iii. நாம் அன்றாடம் உணவுப் பதார்த்தங்கள் சமைக்கப்படுகிறது. பாத்திரங்கள் காலியானதும் அவற்றைச் சுத்தம் செய்கிறோம். சில நேரம் மீதமான சிறிதளவு உணவுப் பதார்த்தத்துடன் பாத்திரத்தைக் கழுவாமல் மூடிய நிலையில் ஒரு நாள் வைத்து விட்டு, மறுநாள் அந்தப் பாத்திரத்தைத் திறந்தால் அதிலிருந்து துர்நாற்றம் வீசும். உணவுப் பொருள்கள் கெட்டுப்போதல் என்ற வேதிமாற்றம் இங்கு நிகழ்ந்துள்ளது என்பதை குறிக்கலாம். எனவே இதில் மணம் மாறி துர்நாற்றமாவதும் வேதி மாற்றத்தினைச் சுட்டும் குறியீடாகும்.

கெட்டுப்போதல்
iv. இரும்பாலான ஆணியை சில நாள்கள் நீரில் போட்டு வைத்து பின்னர் அதனைப் பார்க்கும் பொழுது செம்பழுப்பு நிற படலம் ஆணிமேல் காணப்படும். இங்கு துருப்பிடித்தல் மூலம் வேதியியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பதை குறிக்கலாம். எனவே இதில் இரும்பு ஆணியின் நிறமாற்றம் வேதி மாற்றத்தினைச் சுட்டும் காரணியாகும்.

துருப்பிடித்தல்
v. சூடான பாலில் எலுமிச்சைச் சாற்றினைக் கலந்தால் பால் திரிந்து தயிர் ஆகும். வீழ்படிவு உருவாவது என்பது சூடான பாலுக்கும் எலுமிச்சைச் சாற்றுக்கும் இடையே வேதியியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பதை குறிக்கலாம். எனவே இதில் வீழ்படிவு உருவாவது வேதி வினையினைச் சுட்டும் குறியீடாகும்.

வீழ்படிவு