PDF chapter test TRY NOW
கீழே உள்ள கேள்விகளைக் கவனியுங்கள்.
உங்கள் உயரம் என்ன?
உங்கள் சட்டை அளவு என்ன?
இப்போது நேரம் என்ன?
நம் அன்றாட வாழ்க்கையில் இந்தக் கேள்விகளை சந்தித்திருக்கலாம். இந்த கேள்விகள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட பொருளின் அளவைக் குறிக்கின்றன. நம்மைச் சுற்றியுள்ள அனைத்து பொருட்களும் அளவிடப்படுகின்றன.
அதாவது, நாம் பயணிக்கும் அல்லது கடக்கும் தூரம் மீட்டர் அல்லது கிலோமீட்டரில் அளவிடப்படுகிறது, நாம் வாங்கும் காய்கறிகள் கிராம் அல்லது கிலோகிராமில் அளவிடப்படுகிறது. நாம் பின்பற்றும் நேரம் நிமிடங்கள் மற்றும் மணிநேரங்களில் அளவிடப்படுகிறது.
இந்த அளவுகள் என்பது என்ன?
இந்த அளவுகள் இயற்பியல் அளவுகள் என்று அழைக்கப்படுகின்றன. அளவீடு என்பது, ஒரு பொருளின் பண்பையோ அல்லது நிகழ்வையோ மற்றொரு பொருளின் பண்பு அல்லது நிகழ்வுடன் ஒப்பிட்டு அப்பொருளுக்கு அல்லது நிகழ்வுக்கு ஒரு எண்மதிப்பை வழங்குவதாகும்.
ஒரு பொருளின் அளவு மற்றும் எண் மதிப்பைத் தீர்மானிப்பதே அளவீடு என்று வரையறுக்கப்படுகிறது. எந்தவொரு செயல்முறையையும் அல்லது எந்தவொரு பொருளின் பண்புகளையும் அளவிட இயற்பியல் அளவுகள் பயன்படுத்தப்படுகின்றன.
1. வானிலை மாற்றத்தை வெப்பநிலையின் அடிப்படையில் அளவிட முடியும்.
2. ஒரு பொருளின் எடையை கிராம் அல்லது கிலோகிராமில் அளவிட முடியும்.
இயற்பியல் அளவுக்கான எடுத்துக்காட்டுகள்:
நாம் இயற்பியல் அளவுகளைப் பற்றி கேள்வியுற்றிருப்போம். ஆனால், நாம் ஏன் வெவ்வேறு இயற்பியல் அளவுகளைப் பயன்படுத்துகிறோம் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
வெவ்வேறு இயற்பியல் அளவுகளைப் பயன்படுத்துவதன் நோக்கம்:
அவற்றின் பண்புகளின் அடிப்படையில் அளவீடுகளை வேறுபடுத்த, நாம் வெவ்வேறு இயற்பியல் அளவுகளைப் பயன்படுத்துகிறோம்.
எடுத்துக்காட்டாக, ஒரே இயற்பியல் அளவைப் பயன்படுத்தி இரண்டு புள்ளிகளுக்கும் இடையிலான தூரத்தையும் அந்த புள்ளிகளின் வெப்பநிலையையும் அளவிட முடியாது. ஏனெனில், இவை இரண்டும் வெவ்வேறு அளவீடுகள்.
வெவ்வேறு அளவீடுகளுக்கு வெவ்வேறு அளவுகளைப் பயன்படுத்துவதற்கான காரணம் இதுதான்.
இயற்பியல் அளவுகளை இரண்டாக வகைப்படுத்தலாம். அவை:
1. அடிப்படை அளவுகள்
2. பெறப்பட்ட அளவுகள்
அடிப்படை அளவுகள்
வேறு எந்தவொரு அளவினாலும் அளவிட முடியாத அளவுகளை அடிப்படை அளவுகள் என்கிறோம். எடுத்துக்காட்டு: நீளம், நிறை, காலம் மற்றும் வெப்பநிலை.
இவற்றை மற்ற அளவீடுகளில் குறிப்பிட முடியாது. ''அடிப்படை அளவுகள்" என அறியப்படும் ஏழு இயற்பியல் அளவுகள் உள்ளன, அவற்றை அளவிட நிலையான அலகுகள் உருவாக்கப்பட்டன. அந்த நிலையான அலகுகள் "அடிப்படை அலகுகள்" என அழைக்கப்பட்டன, அவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
அளவு | அலகு |
நீளம் | மீட்டர் \((m)\) |
நிறை | கிலோகிராம் \((kg)\) |
காலம் | வினாடி \((s)\) |
வெப்பநிலை | கெல்வின் \((K)\) |
மின்னோட்டம் | அம்பியர் \((A)\) |
பொருளின் அளவு | மோல் \((mol)\) |
ஒளிச்செறிவு | கேண்டிலா \((cd)\) |
பெறப்பட்ட அளவுகள்
ஒன்றிற்கும் மேற்பட்ட அடிப்படை அளவுகளினால் அளவிடக்கூடிய அளவுகள் பெறப்பட்ட அளவுகள் எனப்படும்.
எண் | இயற்பியல் அளவு | வாய்ப்பாடு | அலகு |
1 | பரப்பு | நீளம் × அகலம் | மீ\(^2\) \((m^2)\) |
2 | பருமன் | நீளம் × அகலம் × உயரம் | மீ\(^3\) \((m^3)\) |
3 | அடர்த்தி | நிறை / பருமன் | கி.கி/மீ\(^3\) \((kg / m^3)\) |
4 | திசைவேகம் | இடப்பெயர்ச்சி/காலம் | மீ/வி \((m/s)\) |
5 | உந்தம் | நிறை × திசைவேகம் | கி.கிமீ/வி \((kgms^-1)\) |
6 | முடுக்கம் | திசைவேகம் /காலம் | மீ/வி\(^2\) \((m/s^2)\) |
7 | விசை | நிறை × முடுக்கம் | கி .கிமீ/ வி\(^2\) \((kgms^-2)\) அல்லது நியூட்டன் \((N)\) |
8 | அழுத்தம் | விசை / பரப்பளவு | நியூட்டன் / மீ\(^2\) \((N/m^2)\) அல்லது பாஸ்கல் \((Pa)\) |
9 | ஆற்றல் (வேலை) | விசை × தொலைவு | நியூட்டன் × மீ \((Nm)\) அல்லது ஜுல் \((J)\) |
10 | பரப்பு இழுவிசை | விசை / நீளம் | நியூட்டன் / மீ \((N/m)\) |