PDF chapter test TRY NOW
இயற்கையோடு இயற்கையாகப் பின்னிப் பிணைந்தவர்கள் நமது பழந்தமிழர்கள்.
தமிழர்கள் வழிபாட்டுடன் நிற்காமல் தமது கற்பனை கலந்து இலக்கியங்களிலும் புனைவாக்கினர்.
இயற்கையால் அமைந்த வாழ்வில் வாழ்வியல் நெறிகளையும், வாழ்க்கை முறைகளையும் பதிவு செய்தனர்.
இயற்கையைக் கொண்டாடிய மக்களாகத் தமிழர்கள் வாழ்ந்த மரபிலிருந்து விலகாமல் தமது கனவு இல்லத்தைப் பராசக்தியிடம் வேண்டுகிறார்.
திங்கள், மதி, சந்திரன், அம்புலி, நிலா, நிலவு என்னும் பல பெயர்களில் அழைக்கப்படும் நிலவு கவிஞர்களின் கவிதையில் நீங்கா இடம்பெற்ற ஒன்று எனலாம்.
சிலப்பதிகாரத்தில் "திங்களை போற்றுதும் " என்று மங்கள வாழ்த்து காதையில் பாடுவதைக் கண்டோம். அதேபோல், பாரதியார் காணி நிலம் வேண்டுகையில்,
நல்ல முத்துச் சுடர்போலே – நிலாவொளி முன்பு வரவேணும் என்கிறார்.
காற்றுக்கு வளி, தென்றல், புயல், சூறாவளி எனப் பல்வேறு பெயர்கள் உண்டு.
பருவநிலை, சூழல், வீசும் வேகம் ஆகியவற்றிற்கேற்பத் தென்றல் காற்று, பூங்காற்று, கடல் காற்று, பனிக் காற்று, வாடைக் காற்று, மேல் காற்று, கீழ்க் காற்று, மென் காற்று, இளந் தென்றல், புழுதிக் காற்று, ஆடிக்காற்று, கடுங்காற்று, புயல்காற்று, பேய்க்காற்று, சுழல்காற்று, சூறாவளிக்காற்று எனப் பல்வேறு பெயர்களில் காற்று அழைக்கப்படுகிறது.
கிழக்கிலிருந்து வீசும் காற்று கொண்டல் காற்று என்றும், மேற்கிலிருந்து வீசும் காற்று கோடை காற்று என்றும், வடக்கிலிருந்து வீசும் காற்று வாடைக் காற்று என்றும், தெற்கிலிருந்து வீசும் காற்று தென்றல் காற்று என்று அழைக்கப்படுகிறது.
பாரதியார் தமது இல்லத்திற்கு இளந்தென்றல் வரவேண்டும் என்கிறார்.
தெற்கிலிருந்து வீசும் தென்றல் காற்று மரங்கள், செடிகள், கொடிகள், ஆறுகள், மலைகள், பள்ளத்தாக்குகள் எனப் பலவிதமான இயற்கைகளைக் கடந்து வரும்போது, அதன் வேகம் குறைந்து இதமான இயல்போடு வீசும். இக்காற்றையே பாரதி விரும்புகிறார்.
காணி நிலம் வேண்டும் என்று பராசக்தியிடம் கேட்கையில் இயற்கை எழில் சூழ்ந்த மாசு இல்லாத சுற்றுச் சூழலைச் சாத்தியமாக்க எண்ணுகிறார்.
காணி அளவு கொண்ட நிலத்தில், பெரிய மாளிகை ஒன்று கட்ட வேண்டும்.
அம்மாளிகையில் மிகமிக அழகான தூண்கள் இருக்கும்படியாகவும், தூய்மையான வெண்மை நிறத்துடைய பெரிய மாடங்களையும் அது கொண்டிருக்க வேண்டும்.
அங்கு நற்சுவையான நீரையுடைய கிணறு அமைய வேண்டும்.
அம்மாளிகையின் அருகில் குளிர்ச்சியான தென்றல் காற்றை வீசக்கூடிய மரங்களையும் மற்றும் நல்ல இளநீரையும் கீற்றுகளையும் தரும் பத்து பன்னிரண்டு தென்னை மரங்களையும் கொண்டிருக்க வேண்டும்.
அம்மாளிகையின் அருகில் இரவு நேரத்தில் முத்து போல வெளிச்சத்தைக் கொடுக்கக் கூடிய நிலவின் ஒளி வீச வேண்டும்.
செவிகளுக்கு இனிமையான குயில்களின் குரலோசைக் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
மனம் மகிழ்ச்சியில் மூழ்க வேண்டும்.
குளிர்ந்த இளந்தென்றல் வீச வேண்டும் என்று பராசக்தியிடம் கேட்கிறார்.
இயற்கையை வழிபட்ட பாரதி பராசக்தி, (சக்தி, சிவசக்தி, காளி, தேச முத்துமாரி, கோமதி) கலைமகள், திருமகள், வள்ளி, விநாயகர், கண்ணன், முதலிய தெய்வங்களைக் குறித்துப் பாடியிருக்கிறார்.