PDF chapter test TRY NOW

வேர் என்பது தாவரங்களில் காணப்படும் ஓர் உறுப்பாகும். பெரும்பாலும் ஒருவிதையிலைத் தாவர வேர், நார் வேர்த் தொகுப்பைக் கொண்டவை. இரு விதையிலைத் தாவர வேரைப் போன்று ஒரு விதையிலைத் தாவர வேரும் உள் கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது. இக்கோட்பாட்டில் ஒரு விதையிலைத் தாவர வேரின் உள்ளமைப்பு குறித்து விரிவாகக் காண்போம்.
 
YCIND20220804_4089_Plant anatomy and physiology_05.png
ஒரு விதையிலைத் தாவரவேரின் குறுக்கு வெட்டுத் தோற்றம்
 
மேலே உள்ள படம் ஒரு வித்திலைத் தாவர வேர் - மக்காச்சோளத்தின் குறுக்குவெட்டு தோற்றத்தைக் காட்டுகிறது.
 
ஒரு வித்திலைத் தாவரவேரை வெட்டி அவற்றின் குறுக்கு வெட்டு தோற்றத்தை நுண்ணோக்கி மூலம் உற்று நோக்கும் பொழுது கீழ்க்காணும் பகுதிகளை நம்மால் காண இயலும்.
 
ஒரு விதையிலைத் தாவர வேரின் உள்ளமைப்புகள்  கிட்டத்தட்ட இரு விதையிலைத் தாவர வேரைப் போலவே இருக்கும். இரண்டிலும் எபிபிளமா, புறணி, அகத்தோல், ஸ்டீல்பெரிசைக்கிள், வாஸ்குலார் தொகுப்பு மற்றும் பித் ஆகியவை உள்ளன.
 
ஒரு விதையிலைத் தாவர வேரில் வாஸ்குலார் தொகுப்புகளின் எண்ணிக்கை எட்டுக்கும் அதிகமாக உள்ளது, அதே சமயம் இரு விதையிலைத் தாவர வேரின் நான்கு மட்டுமே இருக்கும். மேலும், பித் ஒரு விதையிலைத் தாவர வேரில் பெரியது  ஆனால் இரு விதையிலைத் தாவர வேரில் பித் சிறியது.
 
i. எபிபிளமா அல்லது ரைசோடெர்மிஸ்:
 
இது இரு விதையிலைத் தாவர வேரின் வெளிப்புற அடுக்காகும். இந்த அடுக்கு செல் இடைவெளி இல்லாமல் மெல்லிய சுவர் கொண்ட பாரன்கைமா செல்களால் ஆனது. இவ்வடுக்கில் கீயூட்டிக்கிள் மற்றும் புறத்தோல் துளைகள் காணப்படுவதில்லை. இவ்வடுக்கில் ஒரே ஒரு செல்லாலான வேர்த் தூவிகள் காணப்படும் இது நிலத்திலிருந்து நீர் மற்றும் கனிம உப்புகளை உறிஞ்சுவதற்கு உதவுகின்றன. மேலும் ரைசோடெர்மிஸ் அடுக்கு உட்புறமாக உள்ள அனைத்து திசுக்களையும்  பாதுகாக்கிறது.
 
ii. புறணி:
 
ஒரு விதையிலைத் தாவர வேரின் குறுக்குவெட்டுப் பிரிவை மேலே உள்ள படத்தில் பார்க்கும் பொழுது, பாரன்கைமா செல்களாலான பல அடுக்குகள் பெரிய இடைவெளிகளுடன் நெருக்கமில்லாமல்  அமைந்திருப்பதைக்  காண இயல்கிறது, இப்பகுதி  புறணி என்று அழைக்கப்படுகிறது. இவை உணவு மற்றும் தண்ணீரைச் சேமிக்க உதவுகின்றன.
 
 iii. அகத்தோல்:
 
அகத்தோல் புறணியின் கடைசி அடுக்காகும். இந்த அடுக்கு ஒரே வரிசையிலமைந்த பீப்பாய் வடிவ மிக நெருக்கமான செல்களாலானது. மேலே உள்ள படத்தைக் கவனித்தால், அகத்தோலின் உட்புற கிடைமட்ட சுவர்களிலும் மற்றும் அதன் ஆரச் சுவர்களிலும் காஸ்பேரியன் பட்டையை நாம் காணலாம். இப்பட்டைகள் சூபரின் என்ற பொருளினாலானது. புரோட்டாக்சைலக் கூறுகளுக்கு எதிரேயுள்ள அகத்தோல் செல்களில் மட்டும் காஸ்பேரியன் பட்டைகள் இருக்காது. அந்த செல்கள் வழிச் செல்கள் எனப்படும். இந்த செல்கள் நீர் மற்றும் இதர பொருட்களைப்புறணிப் பகுதியிலிருந்து சைலத்திற்குக் கடத்த உதவுகின்றன.
 
 iv. ஸ்டீல்:
 
ஸ்டீல் என்பது அகத்தோலின் உட்புறமாகக் காணப்படும் அனைத்து திசுக்களும் சேர்ந்த பகுதிகளாகும். இப்பகுதி, வாஸ்குலார் கற்றைகள், பெரிசைக்கிள் மற்றும் பித் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
 
அ. பெரிசைக்கிள்:

பெரிசைக்கிள் எனப்படுவது  அகத்தோலின் உட்புறத்தில் காணப்படும் பாரன்கைமா  செல்களாலான  ஓரடுக்காகும். பக்கவாட்டு வேர்கள் இந்த அடுக்கிலிருந்து தான் தோன்றுகிறது.
 
ஆ. வாஸ்குலார் தொகுப்பு:
 
ஒரு விதையிலைத் தாவர வேரில் வாஸ்குலார் கற்றைகள் ஆரப்போக்கு அமைவில் அமைந்துள்ளன. இவ்வகை வாஸ்குலார் தொகுப்பில் சைலம் பலமுனை சைலம் என அழைக்கப் படுகிறது ஏனெனில் இவற்றில் பல முனைகளைக் கொண்ட புரோட்டசைல கூறுகள் காணப்படும். மேலும், சைலம் வெளிநோக்கி அமைந்திருக்கும், அதுமட்டுமல்லாமல், சைலம் மற்றும் புளோயத்திற்கிடையில் இணைப்புத்திசு உள்ளது அவை ஸ்கிளிரன்கைமா செல்களாலானது.
 
இ. பித்:

மேலே உள்ள ஒரு வித்திலைத் தாவர வேரின் குறுக்கு வெட்டு தோற்ற படத்தை நாம் நோக்கும் பொழுது அதன் மையத்தில் பித் உள்ளது. இது செல் இடைவெளிகளைக் கொண்ட பாரன்கைமா செல்களாலானது. இந்த செல்கள் உணவுப் பொருள்களான தரசம் (ஸ்டார்ச்) போன்றவற்றைச் சேமித்து வைக்க உதவுகின்றன.