PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
மர வளையங்கள் குறித்து நீங்கள் ஏதேனும் அறிந்திருக்கிறீர்களா?
 
ஒரு மரத்தைக் குறுக்காக வெட்டும்போது அதில் வளையங்கள் போன்ற அமைப்பு காணப்படுகின்றது. மர வளையங்கள், ஆண்டு வளையங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. அடி மரத்தில் காணப்படும் வளையம் போன்ற அமைப்புகள் தான் ஒரு மரத்தின் வளர்ச்சிக்கான அடையாளமாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், மரத்தில் ஒரு வளையம் கூடும் அதனடிப்படையில் தான் மரத்தின் வயது  தீர்மானிக்கப் படுகிறது.
 
இரு வித்திலைத் தாவரத்தண்டின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை நாம் கவனித்தால் இந்த ஆண்டு வளையங்களை நாம் காண இயலும். இருவித்திலை தண்டிலுள்ள கேம்பியம் காரணமாக வாஸ்குலார் கற்றைகளின் உருவாகும் வளையங்கள் தான் வருடாந்திர அல்லது ஆண்டு வளையங்கள் என்று அழைக்கப்படுகின்றன. கேம்பியம் இருப்பதால் இதன் வாஸ்குலார்  கற்றைகள் திறந்த நிலையில் இருக்கும் அதுமட்டுமல்லாமல் இவை இரண்டாம் நிலை வளர்ச்சிக்கும் உட்படலாம். இந்த கோட்பாட்டில் நாம் இரு வித்திலைத்  தாவரத்  தண்டின் உள்ளமைப்பை குறித்து கற்றுக் கொள்ளவிருக்கிறோம்.
 
YCIND20220804_4089_Plant anatomy and physiology_06.png
இரு விதையிலைத் தாவரத்தண்டின் குறுக்கு வெட்டுத் தோற்றம் (சூரியகாந்தி)
 
மேலே கொடுக்கப் பட்டுள்ள படம், இரு விதையிலை தாவரத்தண்டின் உதாரணமான சூரியகாந்தியின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தின் ஒரு பகுதியைக் காட்டுகிறது.
 
இரு வித்திலைத் தாவரத் தண்டின் உள்ளமைப்பில் கீழ்க்காணும் திசுக்கள் காணப்படுகின்றன.
 
i. புறத் தோல்:
 
இரு வித்திலைத் தண்டின் வெளிப்புற அடுக்கு புறத்தோலாகும். இவை ஒரே ஒரு அடுக்கிலான பாரன்கைமா செல்களால் ஆனது. மேலும் இவற்றின் வெளிப் பகுதியில் கியூட்டீக்கிள் என்னும் படலம் காணப்படும். உட்புற பகுதியில்  காணப்படும் அனைத்து திசுக்களையும் பாதுகாப்பதே புறத்தோலின் மிக முக்கிய பணியாகும்.
 
ii. புறணி:
 
புறத்தோலின் உட்புறப் பகுதி புறணி என அழைக்கப் படுகிறது. இந்த பகுதி மூன்றடுக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன;
  1. புறத்தோலடித் தோல்
  2. மையப்புறணி
  3. உட்புற புறணி
புறத்தோலடித் தோல்:
 
இந்தப்  பகுதி கோலன்கைமா செல்களாலானது. மேலும் இவை  \(3\) முதல்  \(6\) அடுக்குகளைக் கொண்டுள்ளது. தாவரங்களுக்கு உறுதி அளிப்பதே புறத்தோலடித் தோலின் மிக முக்கியப் பணியாகும்.
 
மையப்புறணி:

மையப்புறணி  அடுக்கு, ஒரு சில அடுக்குகளாலான குளோரன்கைமா எனப்படும் சிறப்பு வகை பாரன்கைமா செல்களாலானது; மேலும் இப்பகுதியில் காணப்படும் பசுங்கணிகங்கள்  ஒளிச்சேர்க்கை பணியையும் செய்கிறது.
 
உட்புற புறணி:
 
சில அடுக்குகளாலான பாரன்கைமா செல்கள் புறணியின் உட்புற பகுதியில் காணப்படுகிறது இவை உட்புற புறணி எனப்படும். இந்த செல்கள் உணவுப் பொருட்களைச் சேமிக்க உதவுவதோடு காற்று பரிமாற்றத்திற்கும் உதவுகின்றன.

iii. அகத்தோல்:
 
மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்க்கும் பொழுது ஒரே வரிசையிலமைந்த பீப்பாய் வடிவ மிக நெருக்கமான செல்களாலான அகத்தோலடுக்கு நம் கண்களுக்குப் புலப்படுகிறது. இவை புறணியின் கடைசி அடுக்காகும். இப்பகுதியில் தரசம் (ஸ்டார்ச்) அதிகமாகக் காணப்படும்  எனவே இவற்றை தரச அடுக்கு எனவும் கூறுவர்.
 
iv. ஸ்டீல்:
 
அகத்தோலின் உட்புறம் அமைந்த தண்டின் மையப்பகுதியே ஸ்டீல் என அழைக்கப்படுகிறது. இது பெரிசைக்கிள், வாஸ்குலார்  கற்றைகள் மற்றும் பித் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
 
அ. பெரிசைக்கிள்:
 
வாஸ்குலார் கற்றைக்கும்  அகத்தோலுக்கும் இடையில் காணப்படும் பகுதியே பெரிசைக்கிள் ஆகும். இவை பல அடுக்குகளாலான பாரன்கைமா செல்களால் ஆனது. இச்செல்களுக்கிடையில்  ஸ்கிளிரன்கைமாவால் ஆன திட்டுகளும் காணப்படுகின்றன எனவே இவை கற்றைத் தொப்பி என்றும்  அழைக்கப் படுகிறது.
 
ஆ. வாஸ்குலார் கற்றை:
 
இரு விதையிலைத் தாவரத்தண்டில் வாஸ்குலார் கற்றைகள் பின்வருமாறு அமைந்திருக்கும். அவையாவன
  • ஒன்றிணைந்தவை
  • ஒருங்கமைந்தவை
  • திறந்தவை
  • உள்நோக்கு சைலம் கொண்டவை
இ.  பித்:
 
வாஸ்குலார் கற்றைகளால் சூழப்பட்ட தண்டின் பெரிய மையப் பகுதி பித் என்று அழைக்கப்படுகிறது. இந்த பகுதி பாரன்கைமா செல்களாலானது. இவை உணவுப் பொருட்களைச் சேமித்து வைத்திருக்கும் பணியை மேற்கொள்கிறது.