PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoபுற அமைப்பியல் என்பது ஒரு உயிரினத்தின் வெளிப்புறத் தோற்றம், அளவு, உருவ அமைப்பு, உடல் உறுப்புகள் மற்றும் அதன் இயக்கங்கள் ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்ளுதல் ஆகும்.
இந்தியக் கால்நடை அட்டையின் புறத்தோற்றம்
இந்தியக் கால்நடை அட்டைகளின் புற அமைப்பியலைப் பற்றி விரிவாகக் காண்போம்.
1. உருவம்:
அட்டையின் உடல் சற்று தட்டையாகவும், புழு போன்று நீளமாகவும் இருக்கும். மென்மையான உடல் கொண்ட அட்டைகள் மெட்டாமியர்ஸ் என்னும் கண்டங்களாக பிரிக்கப்பட்ட உடல் அமைப்பைக் கொண்டவை ஆகும். இவை நீளும் போது நாடா போன்றும், சுருங்கும் போது உருளை போன்றும் மாறக்கூடியவை. இவ்வாறு நீண்டு சுருங்கும் போது இடப்பெயர்ச்சி நடக்கின்றது.
2. அளவு:
அட்டைகள் சுமார் \(35\) செ.மீ நீளம் வளரக்கூடியவை.
3. நிறம்:
முதுகுப்புறத்தில் அட்டைகள் ஆலிவ் பச்சை நிறத்தில் தோற்றம் அளிக்கின்றன. வயிற்றுப்புறத்தில் ஆரஞ்சு சிவப்பு (அ) ஆரஞ்சு மஞ்சள் நிறத்துடன் அட்டைகள் தோற்றம் அளிக்கின்றன.
இடது - அட்டை முதுகுப்புறத்தொற்றம், ஆலிவ் பச்சை நிறத்தில் ; வலது - வயிற்றுப்புறத்தோற்றம் ஆரஞ்சு மஞ்சள் நிறத்தில்
4. கண்டங்கள்:
அட்டையின் உடல் மெட்டாமெரிசம் எனப்படும் கண்ட அமைப்பின்படி பகுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பகுக்கப்படும் ஒவ்வொரு பகுதியும் கண்டங்கள் அல்லது சோமைட்டுகள் என்று அழைக்கப்படுகிறது.
கண்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஒரே சீராக அடுக்கப்பட்டுள்ளன.
மெட்டாமெரிசம் என்பது ஒரே சீராய் உடல் முழுவதும் பகுக்கப்படும் முறை ஆகும்.
அட்டையின் உடல் முழுவதும் \(33\) கண்டங்களாகப் பகுக்கப்பட்டுள்ளன.
5. அன்னுலை:
ஒவ்வொரு கண்டமும் வெளிப்புறமாக அன்னுலை அல்லது செறிவான வளையங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. அன்னுலைகளின் எண்ணிக்கை ஒவ்வொரு கண்டத்திற்கும் மாறுபடும். பொதுவாக அட்டைகளில் \(109\) அன்னுலைகள் உள்ளன.
6. கிளைடெல்லம்:
அட்டைகளின் இனப்பெருக்கக் காலத்தில், \(9\)வது கண்டம் முதல் \(11\)வது கண்டம் வரை உடலின் மேற்புறத்தில் தற்காலிகமாக ஒரு கூடு போன்ற ஒரு அமைப்பு உருவாக்கப்படுகிறது. இதற்கு கிளைடெல்லம் என்று பெயர். கிளைடெல்லம் கழன்று வந்து குக்கூன் அல்லது கூடாக உருமாறுகிறது.
7. கண்கள்:
முதுகுப்புறத்தில் \(1\) முதல் \(5\) கண்டங்களில் ஐந்து இணைக் கண்கள் உள்ளன.
8. உணர்வேற்பிகள்:
கண்டங்கள் ஒவ்வொன்றிலும் புடைப்பாகத் தோன்றுவது உணர்வேற்பிகள் ஆகும். ஒவ்வொரு
- வளையத்திலும் தோன்றுவது வளைய உணர்வேற்பிகள் எனப்படும்.
- கண்டங்கள் ஒவ்வொன்றிலும் தோன்றுவது கண்ட உணர்வேற்பிகள் எனப்படும்.
கண்ட உணர்வேற்பிகள் ஒவ்வொரு கண்டத்தின் முதல் வளையத்தில் காணப்படுகின்றன.
9. ஒட்டுறிஞ்சி:
வட்டமான அல்லது நீள்வட்டமான சற்றுக் குழிந்த கிண்ணம் போன்ற உறுப்பு அட்டையின் இரு முனைகளிலும் உள்ளன. இவை ஒட்டுறிஞ்சி எனப்படும்.
(i) முன் ஒட்டுறிஞ்சி:
உடலின் முன் முனையில் முதல் ஐந்து கண்டங்களை ஆக்கிரமித்து அமைந்துள்ளது முன் ஒட்டுறிஞ்சி ஆகும். இது ஒம்புயிரியின் உடலோடு ஒட்டிக்கொள்ளவும், இடப்பெயர்ச்சிக்கும், உணவூட்டத்திற்கும் பயன்படுகிறது. இது, வாய் ஒட்டுறிஞ்சி எனவும் அழைக்கப்படும்.
(ii) பின் ஒட்டுறிஞ்சி:
உடலின் பின் முனையில் இறுதி ஏழு கண்டங்களை ஆக்கிரமித்து பின் ஒட்டுறிஞ்சி அமைந்துள்ளது. ஒட்டிக்கொள்ளவும், இடப்பெயர்ச்சிக்கும் பின் ஒட்டுறிஞ்சி உதவுகிறது.
10. புறத்துளைகள்:
அட்டையின் உடலில் ஐந்து வகையான துளைகள் உடலுக்கு வெளிப்புறமாக அமைந்துள்ளன.அவை
(i) வாய் - முன் ஒட்டுறிஞ்சியின் மையத்தில் அமைந்துள்ளது.
(ii) நெப்ரீடியத்துளைகள்:
இவை கழிவு நீக்கத்துளைகள் ஆகும். இவ்வகைத் துளைகள் மொத்தம் \(17\) இணைகளாக அட்டையின் உடலில் உள்ளன. இவை மூலம் நெப்ரீடியங்கள் உடலின் வெளிப்பகுதியில் திறக்கின்றன. \(6\)முதல் \(22)\ வரையிலான கண்டங்களில் ஒவ்வொரு கண்டத்தின் கடைசி வளையத்தின் வயிற்றுப்பகுதியில் நெப்ரீடியத்துளைகள் காணப்படுகின்றன.
(iii) ஆண் இனப்பெருக்கத்துளை:
ஆண் இனப்பெருக்க மண்டலத்தில் உருவாகும் விந்தணுக்கள் வெளியேற ஆண் இனப்பெருக்கத்துளை உதவுகிறது. உடலின் \(10\)வது உடற்கண்டத்தில் உள்ள இரண்டு மற்றும் மூன்றாவது வளையத்தின் வயிற்றுப்பகுதியின் நடுவில் இத்துளை அமைந்துள்ளது.
(iv) பெண் இனப்பெருக்கத்துளை:
பெண் இனப்பெருக்க மண்டலத்தில் விடுபடும் சினைசெல்கள் பெண் இனப்பெருக்கத்துளை மூலம் வெளியேறுகிறது. இத்துளைகள் உடலின் \(11\)வது கண்டத்தின் இரண்டு மற்றும் மூன்றாவது வளையங்களின் நடுவில் அமைந்துள்ளது.
(v) மலத்துளை:
அட்டையின் முதுகுப்புறத்தில் உடலின் \(26\)வது கண்டத்தின் மையப்பகுதியில் சிறிய அளவில் இத்துளைத் திறக்கிறது.