PDF chapter test TRY NOW
முயலின் சுற்றோட்ட மண்டலம் இரத்தம், இரத்தக்குழாய்கள், இதயம் ஆகியவற்றைக் கொண்டதாகும்.
இதயம்:
மார்பறையினுள், இரு நுரையீரல்களுக்கு நடுவில் அமைந்துள்ளது.இது பேரிக்காய் வடிவம் கொண்டது ஆகும். இரத்தத்தின் தொடர்ச்சியான சுற்றோட்டத்திற்கு இதயம் தொடர்ச்சியாகச் செயற்படுகின்றது.
பெரிகார்டியம் எனும் இரட்டை சவ்வுகளால் ஆன உறை இதயத்தைச் சுற்றி அமைந்துள்ளது.
முயலின் இதயம் (மார்புப்புறத் தோற்றம்)
ஆரிக்கிள், வெண்ட்ரிக்கிள்:
இதயத்தில் இரு ஆரிக்கிள்களும், இரு வெண்ட்ரிக்கிள்களும் என மொத்தம் நான்கு அறைகள் உள்ளன. இதயத்தின் மேற்புறத்தில் வலது ஆரிக்கிள் மற்றும் இடது ஆரிக்கிள் அமைந்துள்ளது. இதற்குக் கீழே வலது வெண்ட்ரிக்கிள் மற்றும் இடது வெண்ட்ரிக்கிள் உள்ளன.
இடைத்தடுப்புச் சுவர்:
- ஆரிக்கிள் இடைத்தடுப்புச் சுவர் - வலது மற்றும் இடது ஆரிக்கிளைப் பிரிக்கின்றன.
- வெண்ட்ரிக்கிள் இடைத்தடுப்புச் சுவர் - வலது மற்றும் இடது வெண்ட்ரிக்கிளைப் பிரிக்கின்றன.
ஆரிக்குலோ - வெண்ட்ரிக்குலார் துளைகள்:
வலது ஆரிக்குலோ - வெண்ட்ரிக்குலார் துளைகள் மூலம் வலது ஆரிக்கிள், வலது வெண்ட்ரிக்கிளினுள் திறக்கிறது. இத்துளை மூவிதழ் வால்வினால் காக்கப்படுகிறது.
இடது ஆரிக்குலோ - வெண்ட்ரிக்குலார் துளைகள் மூலம் இடது ஆரிக்கிள், இடது வெண்ட்ரிக்கிளினுள் திறக்கிறது. இத்துளையை ஈரிதழ் வால்வு அல்லது மிட்ரல் வால்வு காக்கிறது.
நுரையீரல் மற்றும் பெருந்தமனி திறக்கும் இடங்களில் அரைச்சந்திர வால்வுகள் உள்ளன.
பெருஞ்சிரைகள்:
இரு மேற்பெருஞ்சிரைகள் அல்லது முன்கேவல் சிரைகள் மற்றும் ஒரு கீழ்ப்பெருஞ்சிரை அல்லது பின் கேவல் சிரை இதயத்தின் வலப்புறத்தில் காணப்படுகிறது. இவை உடல் முழுவதும் இருந்து ஆக்ஸிஜன் நீக்கம் பெற்ற இரத்தத்தை, வலது ஆரிக்கிளுக்கு எடுத்து வருகிறது. வலது ஆரக்கிளில் இருந்து வலது வெண்ட்ரிகிளுக்குச் செல்லும் இந்த ஆக்ஸிஜன் நீக்கம் பெற்ற இரத்தம், நுரையீரல் வளைவு மூலம் நுரையீரலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு ஆக்சிஜனால் செரிவூட்டப்படுகிறது.
நுரையீரலில் இருந்து பெறப்படும் ஆக்சிஜன் ஏற்றப்பட்ட இரத்தம், நுரையீரல் சிரைகள் மூலம் இடது ஆரிக்கிளுக்குச் செல்கிறது. இடது வெண்ட்ரிகிளுக்குச் செல்லும் இந்த ஆக்ஸிஜன் ஏற்றப்பட்ட இரத்தம், சிஸ்டமிக் வளைவின் மூலம் உடலின் எல்லா பாகங்களுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது.