PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoசுவாசம் அல்லது மூச்சியக்கம் என்பது உயிர்கள் வாழ்வதற்கான ஒரு இன்றியமையாத உடலியக்க செயல்பாடாகும். முயலின் சுவாச மண்டலம் மனிதர்களைப் போலவே அமைந்துள்ளது. அதாவது,
காற்றில் இருந்து ஆக்ஸிஜன் உள்ளிழுக்கப்பட்டு உடல் உறுப்புகளுக்கு கடத்திச் செல்லப்படுவதும், கழிவுப்பொருளான கார்பன் டை ஆக்ஸைடு உடலில் இருந்து வெளியேற்றப்படுவதுமாக நிகழும் ஒரு உடல் இயக்கமாகும்.
சுவாச நிகழ்வுகள்
- உட்சுவாசம் - காற்றை உள்ளிழுத்தல்
- வெளிச்சுவாசம் - காற்றை வெளித் தள்ளுதல்
உட்சுவாசம் ஒரு செயல்மிகு நிகழ்வாகும், மற்றும் வெளிச்சுவாசம் ஒரு மந்த நிகழ்வாகும்.
முயலின் சுவாச உறுப்புகளும் அதன் செயல்பாடுகளும் பின்வருமாறு;
வளிமண்டலத்தில் காணப்படும் காற்று, முயலின் மூக்கின் நுனியில் காணப்படும் நாசித்துவாரங்கள் வழியே உள்ளே இழுக்கப்படுகிறது. மூக்குப்பகுதி உட்புறத்தில் இரு அறைகளாக மூக்கு எலும்பின் மூலம் பிரிக்கப்பட்டுள்ளது. மூக்கு அறையினுள் அமைந்திருக்கும் உரோமங்கள் காற்றில் காணப்படும் தூசி மற்றும் துகள்களை வடிகட்டிப் பின்னரே நுரையீரலுக்குள் அனுமதிக்கிறது. இக்காற்று, நாசித் தொண்டைக் குழல் வழியே நுரையீரலுக்கு செல்கிறது.
நுரையீரல்:
முயலின் நுரையீரல்கள்
முயலின் சுவாச மண்டலத்தில் ஓரிணை நுரையீரல்கள் உள்ளன. இவை மார்புக்கூட்டினுள் வைக்கப்பட்டுள்ளன. நுரையீரல்கள் மென்மையான பஞ்சு போன்ற திசுக்களால் உண்டானவை. மார்பறை என்பது சுற்றிலும் எலும்புகளால் சூழப்பட்ட ஒரு கூடு போன்ற இடமாகும். பின்வரும் எலும்புகள் மார்புக்கூட்டினை உருவாக்குகின்றன.
இவை மென்மையான நுரையீரலுக்கு ஒரு பாதுகாப்பான அறையை உருவாகுகின்றன.
மார்புக்கூட்டின் முதுகுப்புறத்தில் முதுகெலும்புத் தொடரும், வயிற்றுப்புறத்தில் மார்பு எலும்பும், பக்கவாட்டில் விலா எலும்புகளும் சூழ்ந்துள்ளன.
உதரவிதானம்:
இவை பாலூட்டிகளில் மட்டுமே காணப்படுகின்றன. உதரவிதானம் என்பது மார்பறையையும், வயிற்றறையையும் பிரிக்கும் தசையால் ஆன உறுப்பாகும். பாலூட்டிகளின் சுவாச இயக்கத்தில் இது முக்கிய பங்காற்றுகிறது. குவிந்த நிலையில் இருக்கும் இவ்வுறுப்பானது தொடர்ச்சியாக விரிந்து மற்றும் சுருங்கி மார்புக்கூட்டின் கனஅளவை மாற்றியமைக்கிறது. இதன் மூலம் காற்றினை உள்ளிழுத்தல் மற்றும் வெளிவிடுதல் செயல்பாடு நிகழ்கிறது.
ப்ளூரா:
இது இரட்டை சவ்வினால் ஆன ஒரு உறையாகும். ஒவ்வொரு நுரையீரலும் இந்த உறையினால் சூழப்பட்டுள்ளன.
லேரிங்ஸ்:
இது குரல்பெட்டி என அழைக்கப்படுகிறது. மூச்சுக்குழாயின் மேற்பகுதி அகன்று குரல் பெட்டியாக உருமாறியுள்ளது. இந்தக் குரல்பெட்டி நான்கு குறுத்தெலும்புத்தகடுகளால் சூழப்பட்டு வலுவானதாக இருக்கிறது. குரல் பெட்டியினுள் காணப்படும் குரல் நாண்கள் அதிரும்பொழுது குரல்ஒலி உண்டாகிறது. முயலின் சுவாச மண்டலத்தில் லேரிங்ஸ் (அ) குரல் பெட்டியின் தொடர்ச்சியாக டிரக்கியா அல்லது மூச்சுக்குழல் அமைந்துள்ளது.
டிரக்கியா:
இதன் சுவர்கள் நெகிழவிடாமல், குருத்தெலும்பு வளையங்களால் தாங்கப்படுகின்றன. மூச்சுக்குழாயான இதன் வழியே காற்று எளிதாக சென்று வரும் வகையில் நீளமான குழாய் போன்ற அமைப்பில் உள்ளது.
குரல்வளை மூடி - உணவுண்ணும் போது தவறுதலாக உணவு குரல்வளை வழியாக மூச்சுக்குழாயினுள் செல்வதை இது தடுக்கிறது.
மூச்சுக்கிளைக் குழல்கள் - மூச்சுக்குழாய் மார்புப்பகுதியில் இரண்டு கிளைகளாகப் பிரிகிறது. ஒவ்வொரு கிளைக்குழலும் ஒரு நுரையீரலுக்குள் நுழைகிறது.
நுண்கிளைக் குழல்கள் - மூச்சுக்கிளைக் குழல்கள் மூலம் உள்வரும் காற்று, மிகச் சிறிய நுண்ணிய அளவிலான கிளைகுழல்களுக்குள் சென்று நுண்ணறைகளில் முடிகிறது.
சுவாச இயக்கம்:
வெளிப்புறக்காற்று, புற நாசித்துளைகள் மூலமாக சுவாசப் பாதையினுள் நுழைகிறது. அங்கிருந்து தொண்டையை வந்தடைகிறது. குரல்வளையத் தாண்டி மூச்சுக்குழலுக்குள் நுழையும் காற்று கிளைக்குழலுக்குள் இரண்டாகப் பிரிந்து, நுண்கிளைக்குழலுக்குள் சென்று நுண்ணறைகளில் நிரம்புகிறது.
காற்று நுண்ணறைகளில் நிரம்பியுள்ள ஆக்சிஜன், அங்குள்ள இரத்த அணுக்களில் கலந்து உடலுக்குச் செறிவூட்டுகிறது.