PDF chapter test TRY NOW
- நாம் வாழும் இவ்வுலகம், பல்வேறு வகையான உயிரினங்களுக்கும் வாழ்விடமாக விளங்குகிறது.
- கண்ணுக்குப் புலப்படாத மிகச்சிறிய உயிரினமான பாக்டீரியா முதல் மிகப்பெரிய உயிரினமான நீலத்திமிங்கலம் வரை, \(2\) மில்லியன் உயிரினங்கள் அறிவியல் வல்லுனர்களால் கண்டுபிடிக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளன.
- இவ்வாறு வகைப்படுத்த வேண்டிய உயிரினத்தை மற்ற உயிரினத்தோடு ஒப்பிட்டு அதன் பரிணாம வளர்ச்சியை தொடர்புபடுத்திக்கொள்ள, பிரிவுகளின் படிநிலை என்ற முறை பயன்படுத்தப்படுகிறது.
பிரிவுகளின் படிநிலை
பிரிவுகளின் படிநிலை என்பது வகைப்பாட்டியல் பிரிவுகளையும் மற்ற உயிரினங்களோடு அவற்றிற்குள்ள தொடர்பினையும் இறங்குவரிசையில் அமைக்கும் முறை ஆகும்.
Important!
இந்த படிநிலை முறை கரோலஸ் லின்னேயஸ் என்பவரால் அறிமுகப்படுத்தபட்டதால் இது லின்னேயஸ் படிநிலை என்று அழைக்கப்படுகின்றது.
கரோலஸ் லின்னேயஸ்
- சுவீடன் நாட்டைச் சேர்ந்த தாவரவியலாளர், விலங்கியலாளர் மற்றும் மருத்துவர் ஆன கரோலஸ் லின்னேயஸ் உயிரினங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்த ஒரு முன்னோடி அறிவியலாளர் ஆவார்.
- இவர் உயிரினங்களை வகைப்படுத்துவதற்கு படிநிலை முறையை அறிமுகப்படுத்தினார்.
- உயிரினங்களுக்கு இருசொல் பெயரிட்டு அழைக்கும் முறையை செயல்படுத்தியவரும் இவரே ஆவார்.
- உயிரியல் துறைக்கு இவர் அளித்த பங்களிப்பு மிகவும் போற்றப்படத்தக்கதாகும்.
Important!
கரோலஸ் லின்னேயஸ் நவீன வகைப்பாட்டியலின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
லின்னேயஸ் படிநிலை
லின்னேயஸ் அவர்களின் கூற்றுப்படி வகைப்பாட்டில் ஏழு முக்கியப் படிநிலைகள் உள்ளன.அவை உலகம், தொகுதி, வகுப்பு, வரிசை, குடும்பம், பேரினம், சிற்றினம் ஆகும்.
லின்னேயஸ் படிநிலை
Important!
வகைப்பாட்டின் அடிப்படை அலகு சிற்றினமாகும்.