PDF chapter test TRY NOW
ஒரு பொருளில் உள்ள பருப்பொருட்களின் அளவே நிறை ஆகும். நிறையின் SI அலகு கிலோகிராம்.
ஒரு கிலோகிராம் என்பது செவ்ரஸ் (பிரான்ஸ்) எனும் இடத்திலுள்ள எடை மற்றும் அளவீடுகளுக்கான பன்னாட்டு அமைப்பில் வைக்கப்பட்டுள்ள பிளாட்டினம் – இரிடியம் உலோகக்கலவையால் செய்யப்பட்ட முன் மாதிரி உருளையின் நிறைக்கு சமன் ஆகும்.
நிறை என்பது பொருளின் அடிப்படை அளவீடு ஆகும். ஒவ்வொரு பொருளின் நிறையும் திட, திரவ அல்லது வாயு நிலையில் இருக்கும்.
கிராம் மற்றும் மில்லிகிராம் ஆகிய அலகுகள், கிலோகிராம் என்ற அலகின் துணைப் பன்மடங்குகள் ஆகும். அதைப்போலவே, குவிண்டால் மற்றும் மெட்ரிக் டன் ஆகியவை கிலோகிராம் என்ற அலகின் பன்மடங்குகள் ஆகும். அவற்றின் தொடர்பு பின்வருமாறு.
1 கிராம் = 1 / 1000 கி.கி. = 0.001 கி.கி.
1 மில்லிகிராம் = 1 / 1000000 கி.கி. = 0.000001 கி.கி.
1 குவிண்டால் = 100 × 1 கி.கி. = 100 கி.கி.
அணு நிறை அலகு
அணுவின் துகள்களான புரோட்டான், நியூட்ரான் மற்றும் எலக்ட்ரான் முதலியவற்றின் நிறையை அணுநிறை அலகால் அளவிடலாம்.
அணுநிறை அலகு (1 amu) = கார்பன் C^{12} அணுவின் நிறையில் 1/12 மடங்கு ஆகும்.
1 மெட்ரிக் டன் = 1000 x 1 கி.கி. = 10 குவிண்டால்
குறிப்பு
1mL நீரின் நிறை = 1g 1L நீரின் நிறை = 1kg (அடர்த்தியைப் பொறுத்து மற்ற திரவங்களின் நிறை மாறுபடுகின்றன)
நமது அன்றாட வாழ்வில் நிறை என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோமா?
உதாரணமாக, உங்கள் நிறை என்ன என்று நாங்கள் கேட்க மாட்டோம். ஆனால், உங்கள் எடை என்ன என்று கேட்போம்? எனில், நிறை மற்றும் எடைக்கு என்ன வேறுபாடு? இப்போது இந்த இரண்டு சொற்களுக்கும் உள்ள வேறுபாட்டைப் பார்ப்போம்.
வ எண் | நிறை | எடை |
1 | நிறை (m) என்பது ஒரு பொருளில் உள்ள பருப்பொருள்களின் அளவாகும். | எடை (w) என்பது ஒரு பொருளின் மீது செயல்படும் புவியீர்ப்பு விசையை குறிக்கும். அதனை சமன்செய்வதற்காக அந்தப் பொருளின் பரப்பில் செலுத்தப்படும் எதிர் விசையே எடை ஆகும். |
2 | ஒரு பொருளின் நிறை ஒரு நிலையான மதிப்பு, மேலும் அது இடத்தின் மாற்றங்களால் மாறுபடாது. | எடை இடத்துக்கு இடம் மாறும் திறன் கொண்டது. |
3 | நிறை என்பது ஒரு அடிப்படை அளவு. | எடை என்பது வழி அளவு. |
4 | எண் மதிப்பு மட்டும் கொண்ட அளவு. எனவே, இது அளவிடல் (scalar) அளவாகும். | எண் மதிப்பு மற்றும் திசைப் பண்பு கொண்டது, எனவே, இது திசையன் (vector) அளவாகும். |
5 | இயற்பியல் தராசு மூலம் நிறை அளவிடப்படுகிறது. | சுருள் வில் தராசு கருவியைப் பயன்படுத்தி எடை அளவிடப்படுகிறது. |
6 | கிலோகிராம் என்பது நிறையின் அலகு. | நியூட்டன் என்பது எடையின் அலகு. |