PDF chapter test TRY NOW
சிறுநீரகத்தின் அடிப்படை அலகு நெஃப்ரான்கள் (சிறுநீரக நுண்குழல்கள்) ஆகும்.
சிறுநீரக நுண்குழல்கள் சிறுநீரகத்திலிருந்து சிறுநீரை வடிகட்டும் செயலை சிறப்பாகச் செய்கின்றன . ஒவ்வொரு சிறுநீரகமும் \(10\) முதல் \(20\) லட்சம் அதாவது இரண்டு மில்லியனை விட அதிகமான நெஃப்ரான்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த நெஃப்ரான்கள் வழியாக இரத்தம் பாய்ந்து செல்லும் போது அதிலிருந்து யூரியா எனப்படும் கழிவுப் பொருள்கள் அகற்றப்படுகின்றன.
நெஃப்ரானின் அமைப்பு
இரத்தத்தைச் சரியாக வடிகட்டக் குறைந்தபட்சம் \(300,000\) நெஃப்ரான்கள் தேவைப் படுகின்றன. நமது உடலிலுள்ள இரண்டு சிறுநீரகங்களில் உள்ள நெஃப்ரான்களை எடுத்து நீளமாக வைத்தால் அது \(10\) கிலோமீட்டர் தூரத்திற்கு இருக்கும்.
ஒவ்வொரு நெஃப்ரானிலும் இரு பகுதிகள் காணப்படுகிறது. அவை
- சிறுநீரக கார்ப்பசல் (மால்பீஜியன் உறுப்பு)
- சிறுநீரக நுண்குழல்கள்
1. சிறுநீரக கார்ப்பசல் (Renal corpuscle):
சிறுநீரக கார்ப்பசல் பௌமானின் கிண்ணம் போன்ற அமைப்புடையது.
பணிகள்: இரத்த நுண் நாளங்களின் தொகுப்பாகிய கிளாமருலஸ் என்ற பகுதி இக்கிண்ணத்தில் தான் காணப்படுகிறது. கிளாமருலஸில் உள்ள நுண்நாளத்தொகுப்பில் இரத்தமானது உட்செல் நுண் தமனி (Afferent arterioles) வழியாக உட்சென்று, வெளிச்செல் நுண்தமனி (Efferent arterioles) வழியாக வெளியேறுகிறது.
2. சிறுநீரக நுண்குழல்கள்:
சிறுநீரக கார்ப்பசலைத் தொடர்ந்துள்ள சிறுநீரக நுண்குழல்கள் மூன்று மிக முக்கிய பகுதிகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன, அவையாவன:
- அண்மைச்சுருள் நுண்குழல்
- ஹென்லேயின் வளையம் (‘\(U\)’ வடிவம்)
- சேய்மைச்சுருள் நுண்குழல்
பணிகள்: சேகரிப்புநாளத்தில் சேய்மைச்சுருள் நுண்குழல் திறக்கும். சிறுநீரகப் பெல்விஸில் நைட்ரஜன் கழிவு வடிகட்டப்படுகிறது. பின்னர் சிறுநீர்ப்பையில் தற்காலிகமாகச் சிறுநீர் சேகரிக்கப்பட்டு, சிறுநீர்புறவழி மூலம் வெளியே அனுப்பப்படுகிறது.
சிறுநீர் கழித்தல் நிகழ்வு மனிதனுக்கு ஒரு நாளைக்கு \(4\) முதல் \(8\) முறை வரை நடைபெறும். சிறுநீரகங்கள் ஒவ்வொன்றும் நிமிடத்திற்கு அரை கப் இரத்தத்தை வடிகட்டுகிறது. மேலும் ஒரு நாளில் மட்டும் சிறுநீரகங்கள் சுத்தம் செய்யும் இரத்தத்தின் அளவு \(170 – 180\) லிட்டர் ஆகும்.
இரண்டு சிறுநீரகங்களும் \(2\) மில்லியன் நெஃப்ரான்களை கொண்டுள்ளது. இவை உடலிலுள்ள அனைத்து இரத்தத்தையும் ஒரு நாளைக்கு \(20\) முதல் \(25\) முறை வரை வடிகட்டுகிறது. இது \(99\)% வடிகட்டிய இரத்தத்தை மீண்டும் உடலுக்கு வழங்குகிறது மீதி \(1\)% மட்டும் சிறுநீராக வெளியேற்றப்படுகிறது.