PDF chapter test TRY NOW
சிறுநீரகம் மனித உடலில் காணப்படும் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். சிறுநீரகங்கள் இரத்தத்தை வடிகட்டுகிறது மற்றும் உடலின் கழிவுகளை அகற்றும் அமைப்பாகவும் செயல்படுகிறது. இது அடர் சிவப்பு நிறம் கொண்ட அவரை விதை வடிவத்திலுள்ள உறுப்பாகும்.
சிறுநீரகம் அமைந்துள்ள இடம்:
மனிதர்களில் சிறுநீரகம் வயிற்றின் பின்புற பகுதியில் உள்ளது. இவை முதுகெலும்பின் இரு பக்கங்களிலும், பக்கத்துக்கு ஒன்றாகக் காணப்படுகிறது. வலது சிறுநீரகம், கல்லீரலுக்குச் சற்றுக் கீழ்ப் பகுதியிலும், இடது சிறுநீரகம் உதரவிதானத்திற்குக் கீழே மண்ணீரலுக்கு அருகிலே அமைந்துள்ளன. அட்ரீனல் சுரப்பி ஒவ்வொரு சிறுநீரகத்தின் மேலும் அமைந்துள்ளது.
கல்லீரலின் அமைப்பு வயிற்றின் வலது புறத்தில் அதிக இடத்தில் படர்ந்திருப்பதால், வலது சிறுநீரகம் இடது சிறுநீரகத்தை விடச் சற்றுத் தாழ்வாக அமைந்துள்ளது. ஒவ்வொரு சிறுநீரகமும் \(120\) கிராம் முதல் \(170\) கிராம் எடை கொண்டவை, அதன் நீளம் சுமார் \(11\) செ.மீட்டரும், அகலம் \(5\) செ.மீட்டரும் மற்றும் பருமன் \(3\) செ.மீட்டரும் கொண்டிருக்கும்.
கழிவு நீக்க மண்டலம்
சிறுநீரகத்தின் அமைப்பு:
சிறுநீரகத்தின் மேற்பரப்பில் தசைநார் இணைப்புத் திசுக்கள், சிறுநீரக கேப்சியூல்கள், கொழுப்பு கேப்சியூல்கள் மற்றும் நீளமான நூல்கள் (இழைகள்) போன்ற சவ்வினால் மூடிக் காணப்படும்.
சிறுநீரகத்தின் உள்ளே இரண்டு பகுதிகள் காணப்படுகிறது அவை:
சிறுநீரகம் கார்டெக்ஸ் (புறணி) என்ற அடர்த்தியாக உள்ள வெளிப்பகுதியையும்
மெடுல்லா என்ற மெல்லியதாக உள்ள உட்பகுதியையும்க் கொண்டு காணப்படும். கார்டெக்ஸ், மெடுல்லா என்ற இவ்விரண்டு பகுதிகளும் சிறுநீரக நுண்குழல்கள் அல்லது நெஃப்ரான்களைக் கொண்டிருக்கும்.
இந்த நுண்குழாய்கள் கூம்பு வடிவத்தில் மெடுல்லாவில் பகுதியில் குவிந்து காணப்படுகிறது. இதுவே மெடுல்லா பிரமிடுகள் அல்லது சிறுநீரக பிரமிடுகள் என அழைக்கப்படுகிறது. இதன் கீழ்த்தளம் கார்டெக்ஸ்யின் (புறணி) அருகில் உள்ளது.
ஹைலம் என்பது ஒவ்வொரு சிறுநீரகத்தின் உட்குழிவுப்பகுதியில் உள்ளது. இதில் இரத்த நாளங்களும், நரம்புகளும் வாயில் போன்ற பகுதியில் வழியே உள்ளே செல்கிறது. இதன் மூலம் சிறுநீரானது சிறுநீர் நாளத்தின் வழியே வெளியேற்றப்படுகிறது.
சிறுநீரகத்தின் நீள்வெட்டுத் தோற்றம்
சிறுநீரகத்தின் பகுதிகள்:
சிறுநீர்க்குழாய்:
சிறுநீர்க்குழாய் என்பது சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையை இணைக்கும் ஒரு மெல்லிய தசையாலான குழல் ஆகும். இது சுமார் \(30\) செமீ நீளமுள்ளது.
பணி:
சிறுநீரகத்தின் உட்குழிவுப்பகுதியான ஹைலம் என்ற பகுதியிலிருந்து சிறுநீர்க்குழாய் வெளிப்படுகிறது. ரீனல் பெல்விஸ் என்ற பகுதியிலிருந்து பெரிஸ்டால்டிக் இயக்கத்தின் மூலம் உருவான சிறுநீர் சிறுநீரகக் குழாய் பகுதிக்குக் கடத்தப்படுகிறது.
சிறுநீர்க் குழாயின் முக்கியச் செயல்பாடு சிறுநீரகத்திலிருந்து சிறுநீரை சிறுநீர்ப்பைக்கு எடுத்துச் செல்வதாகும்.
சிறுநீர்ப்பை:
சிறுநீர் கழிப்பைக் கட்டுப்படுத்தும் ஒரு பை போன்ற அமைப்புடைய உறுப்பு சிறுநீர்ப்பை ஆகும். இது சிறுநீரால் நிரம்பும் போது ஒரு சிறிய பந்து வடிவில் காணப்படும்.
பணி:
வயிற்றுப்பகுதியில் உள்ள இடுப்புக்குழி என்ற இடத்தில் சிறுநீர்ப்பை அமைந்துள்ளது. இந்த பையில் \(400\) - \(600\) மில்லி லிட்டர் அளவு சிறுநீரைச் சேகரிக்க முடியும்.
சிறுநீர்ப்புறவழி:
சிறுநீரை வெளியேற்றும் ஒரு தசையாலான குழல் போன்ற அமைப்புடைய உறுப்பு சிறுநீர்ப்புறவழி ஆகும்.
சிறுநீரகச் சுழல் (சிறுநீரக ஸ்பின்க்டர்) என்ற அமைப்பானது சீறுநீர் கழிக்கும் சமயத்தில் சிறுநீர்ப்புறவழியினை திறந்து, மூட வழிவகைச் செய்கின்றது.
சிறுநீரகத்தின் பணிகள்:
- சிறுநீரகங்கள் சிறுநீரை உற்பத்தி செய்து உடலின் நீர் மற்றும் மின்பகுபொருள்களை சம நிலையில் வைத்திருக்க உதவுகிறது.
- இரத்தத்தில் உள்ள அமில - கார சமநிலைத்தன்மையை கட்டுப்படுத்துகிறது.
- இரத்தம் மற்றும் திசுக்களில் சவ்வூடு பரவல் அழுத்தத்தினை (osmotic pressure) கட்டுப்படுத்தி ஒரு குறிப்பிட்ட அளவில் சமநிலையாக வைத்திருக்க உதவுகிறது.
- குளுக்கோஸ் மற்றும் அமினோ அமிலங்கள் போன்றவை பிளாஸ்மா திரவத்தின் முக்கிய பகுதிப் பொருட்கள் ஆகும்.
- கழிவு நீக்கத்திற்கு பின்பும் இவற்றை மீண்டும் பிளாஸ்மாவில் தக்க வைத்து கொள்ள சிறுநீரகங்கள் உதவுகின்றன.